ADDED : ஜூலை 20, 2024 04:56 AM

புதுச்சேரி: டில்லி அரசு விருந்தினர் இல்லத்தில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி புதுச்சேரி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.
அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்தகுமார், டெல்லி விருந்தினர் இல்ல கூடுதல் குடியிருப்பு அதிகாரி ரவிதீப்சகார் காணொலி வாயிலாகவும், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரிந்த டெல்லி வாழ் அதிகாரிகளையும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர், மத்திய சுற்றுலாத்துறை செயலர், விமான போக்குவரத்து செயலர் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த தொழில் புரிவோர்களை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது.
மேலும், புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் மூலம் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கலாச்சார நிகழ்ச்சிகள், புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் மற்றும் பால்பவன் மாணவர்கள் கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.