/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கழிப்பறை வழியாக விஷவாயு வெளியேறி புதுச்சேரியில் சிறுமி உட்பட 3 பேர் பலி கழிப்பறை வழியாக விஷவாயு வெளியேறி புதுச்சேரியில் சிறுமி உட்பட 3 பேர் பலி
கழிப்பறை வழியாக விஷவாயு வெளியேறி புதுச்சேரியில் சிறுமி உட்பட 3 பேர் பலி
கழிப்பறை வழியாக விஷவாயு வெளியேறி புதுச்சேரியில் சிறுமி உட்பட 3 பேர் பலி
கழிப்பறை வழியாக விஷவாயு வெளியேறி புதுச்சேரியில் சிறுமி உட்பட 3 பேர் பலி
ADDED : ஜூன் 12, 2024 02:47 AM

புதுச்சேரி:புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புதுநகர், 4வது குறுக்கு தெருவில், நேற்று காலை, 8:30 மணிக்கு பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளில் உள்ள கழிப்பறைகளில் கடும் துர்நாற்றம் வீசியது.
அப்பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி, 16, என்ற பிளஸ் 1 மாணவி. கழிப்பறைக்கு சென்றார்.
வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது சகோதரர் ஜானி, தாத்தா ஆசீர்வாதம் ஆகியோர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது, செல்வராணி விஷவாயு தாக்கி, கழிப்பறையில் மயங்கி கிடந்தார்.
உடனடியாக கழிப்பறை கதவை உடைத்து, அவரை வெளியே கொண்டு வந்தனர். செல்வராணி வீட்டில் இருந்து, 6வது வீட்டில் வசிக்கும் மூதாட்டி செந்தாமரை, 80, என்பவரும் விஷவாயு தாக்கி கழிப்பறையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற அவரது மகள் காமாட்சி, 45, என்பவரும் கழிப்பறையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
அதேபோல், பாக்கியலட்சுமி, 28, பாலகிருஷ்ணன், 60, ஆகியோரும் கழிப்பறைகளில் மயங்கி கிடந்தனர். வீட்டில் இருந்து அனைவரும் வெளியே ஓடி வந்து, 'விஷவாயு தாக்குகிறது; அனைவரும் வெளியே வாருங்கள்' என, சத்தம் எழுப்பினர்.
விஷவாயு தாக்கி மயங்கிய அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வீடுகளில் இருந்து அனைவரும் வெளியேறினர்.
மருத்துவமனைக்கு சென்ற சிறுமி செல்வராணி, செந்தாமரை, காமாட்சி ஆகியோர் உயிரிழந்தனர். பாக்கியலட்சுமி, பாலகிருஷ்ணன் சிகிச்சை பெறுகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு, கழிப்பறை குழாய்கள் வழியாக வெளியேறி, கழிப்பறைகளில் நிரம்பி நின்றுள்ளது.
அதை அறியாமல், கழிப்பறைக்கு சென்றவர்கள் விஷவாயுவை சுவாசித்து, மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தை முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தனர்.
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, சிறுமி குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய், மற்ற இருவர் குடும்பத்திற்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மற்றும் உயிரிழந்தவர் வீட்டு கழிப்பறையில் விஷவாயுவின் தாக்கம் எவ்வளவு உள்ளது என, இயந்திரங்கள் உதவியுடன் அளவீடு செய்தனர்.