ADDED : ஜூலை 04, 2024 10:10 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பேரிடம் 5.99 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், டெலிகிராம் மூலம் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர் 3.50 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார். தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் ராம்கி. இவரை தொடர்பு கொண்டு மர்ம நபர் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர், 1.88 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, ஏமாந்தார்.
லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்மணி. இவரது கிரெடிட் கார்டு மூலம் அவருக்கு தெரியாமல் 61 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.