/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் கார் ஓட்டிய வாலிபர் புதுச்சேரியில் அடுத்தடுத்து விபத்து 10 பேர் படுகாயம்: 8 பைக்குகள் சேதம் போதையில் கார் ஓட்டிய வாலிபர் புதுச்சேரியில் அடுத்தடுத்து விபத்து 10 பேர் படுகாயம்: 8 பைக்குகள் சேதம்
போதையில் கார் ஓட்டிய வாலிபர் புதுச்சேரியில் அடுத்தடுத்து விபத்து 10 பேர் படுகாயம்: 8 பைக்குகள் சேதம்
போதையில் கார் ஓட்டிய வாலிபர் புதுச்சேரியில் அடுத்தடுத்து விபத்து 10 பேர் படுகாயம்: 8 பைக்குகள் சேதம்
போதையில் கார் ஓட்டிய வாலிபர் புதுச்சேரியில் அடுத்தடுத்து விபத்து 10 பேர் படுகாயம்: 8 பைக்குகள் சேதம்
ADDED : ஜூன் 01, 2024 05:58 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், போதையில் கார் ஓட்டிய வாலிபரால் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 8 பைக்குகள் சேதமடைந்தன.
புதுச்சேரி, கடற்கரை சாலை அடுத்த துாய்மா வீதியில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு டி.என்.எஸ்-8599 பதிவெண் கொண்ட மாருதி 800 கார் அதிவேகமாக பறந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த இரண்டு பைக்குகளை இடித்து தள்ளிய கார் நிற்காமல், புஸ்சி வீதியில் அண்ணா சிலை நோக்கி பறந்தது. அந்த வீதியில் 2 பைக்குகள் மீது மோதிய கார், நிற்காமல் அசூர வேகத்தில் சென்றது. அதனைக் கண்ட பாதசாரிகள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். வாகனங்களில் வந்தவர்களும் சிதறி வழிவிட்டனர்.
மின்னல் வேகத்தில் அண்ணா சதுக்கத்தை கார் தாண்டியதை கண்ட போக்குவரத்து போலீசார், பைக்கில் பின் தொடர்ந்து காரை மடக்க முயன்றனர். ஆனாலும், காரை நிறுத்த முடியவில்லை.
வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை சதுக்கம் வழியாக கடலுார் சாலையில் புகுந்த கார், அசூர வேகத்தில் பைக்குகளை இடித்து தள்ளியபடி மரப்பாலம் சிக்னலுக்கு சென்று புவன்கரே வீதியில் புகுந்து திரும்பி, நெல்லித்தோப்பு சிக்னலை நோக்கி பறந்தது. அந்த சாலையிலும் சென்ற பைக்குகளை இடித்து தள்ளியபடி சென்றது.
பைக்கில் விரட்டி வந்த பொதுமக்கள் காரை நிறுத்த சொல்லி கடுமையாக எச்சரித்தும் கண்டு கொள்ளாத டிரைவர், நெல்லித்தோப்பு விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் அண்ணா நகர் வீட்டுவசதி வாரியம் எதிரே 'ராங் ரூட்டில்' இந்திரா சிக்னலை நோக்கி பறந்தார். இதனால் விழுப்புரம் ரோட்டில் இந்திரா சிக்னலில் இருந்து வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
அதனைக் கண்ட கார் டிரைவர், காரை திருப்ப முயன்றபோது, தடுப்பு கட்டையில் பலத்த சத்தத்துடன் மோதி நின்றது.
பின் தொடர்ந்து வந்த பைக் ஓட்டிகள், அங்கிருந்த பொதுமக்கள் காரினை ஆவேசத்துடன் சுற்றி வளைத்தனர். காரில் புல் போதையில் இருந்த வாலிபரை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் காரில் கண்ணீருடன் அழுது கொண்டிருந்த பெண்ணை மீட்டனர்.
இது கடத்தல் சம்பவமாக இருக்கலாம் எனக்கருதி பெண்ணை தீவிரமாக விசாரித்தனர். ஆனால், அந்த பெண் எந்த பதிலும் கூறாமல், அவரை அடிக்காதீங்க... பிளீஸ் விட்டுவிடுங்க... என, கதறி அழுது கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் விபத்தினை ஏற்படுத்திய வாலிபர், அவருடன் இருந்த பெண்ணையும் மேல் விசாரணைக்காக போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே கார் மோதியதில் அங்காங்கே விழுந்து கிடந்தவர்களை பொதுமக்கள் உதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'போதையில் விபத்தினை ஏற்படுத்தியவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கமல்நாத்,28; 'டாட்டூ' கலைஞரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் எதிர்கால மனைவியை காரில் அழைத்துக் கொண்டு புதுச்சேரியை சுற்றி பார்க்க வந்த கமல்நாத் பீர் குடித்துள்ளார். இதில் போதை தலைக்கேறிய நிலையில் காரினை எடுத்து தொடர் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த தொடர் விபத்தில் 8 பைக்குகளில் வந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இருப்பினும் அவர்களிடம் புகார் இன்னும் வரவில்லை. அவற்றை கணக்கெடுத்து வருகின்றோம் என்றனர்.