Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?

பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?

பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?

பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?

UPDATED : மார் 16, 2025 07:55 AMADDED : மார் 16, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
கோவை: கல்லுாரிகளில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையை போல், உயர்கல்வித்துறையும், குற்றஞ்சாட்டப்பட்டவரை பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்து, நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்லுாரிகளில் மாணவியருக்கு மட்டுமின்றி, பெண் ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதை விசாரிக்க, கல்வி நிறுவனங்களில் உள்ளூர் புகார் கமிட்டிகள், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகின்றன. இக்கமிட்டியில் அளிக்கப்படும் புகார்கள் மீது, பெரியளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 23 பேர், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வித்துறையிலும் இதுபோன்ற, நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறுகையில், ''உயர்கல்வித்துறையில் பாலியல் புகார்கள் பல நிலுவையில் உள்ளன. யாரும் கண்டுகொள்வதில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறையிலும் எடுக்கப்பட்டுள்ளது, நல்ல நடைமுறை. இதை உயர்கல்வித்துறையிலும் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

கல்வியாளர் ரவிசங்கர் கூறுகையில், ''ஏராளமான பல்கலைகளில், பாலியல் புகார்கள் உள்ளன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, முறையான பதில் இல்லை. விழிப்புணர்வு இல்லாததால் வெளியில் தெரிவதில்லை. கல்லுாரிகளில் உள்ளூர் புகார் குழுக்கள் முறையாக செயல்படவில்லை. கல்லுாரி கல்வி இயக்குனரகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்டவர் குறித்த விபரங்களை அந்தந்த பள்ளி, கல்லுாரிகளில் வெளிப்படுத்த வேண்டும்,'' என்றார்.

பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் கூறுகையில், ''அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பல்கலைகளில் உள்ள சிண்டிகேட், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கையை முன்னுதாரணமாக கொண்டு, உயர்கல்வித்துறையிலும் உடனடி நடவடிக்கை அவசியம். அப்போதுதான் மற்றவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பர்,'' என்றார்.

உயர்கல்வித்துறை செயலர் சமயமூர்த்தி கூறுகையில், ''தமிழகத்தில், பல்கலைகள், கல்லுாரி கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி என, அனைத்திலும் சேர்த்து, 50க்கும் குறைவான பாலியல் புகார்கள் உள்ளன. உயர்கல்வித்துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு புகாரையும் தனிப்பட்ட முறையில் விசாரிக்கிறோம். நேற்று(நேற்று முன்தினம்) கூட, இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பாலியல் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us