Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ சைபர் குற்றங்கள் வாயிலாக 6 மாதங்களில் ரூ.500 கோடி மோசடி: நீதிபதி கவலை

சைபர் குற்றங்கள் வாயிலாக 6 மாதங்களில் ரூ.500 கோடி மோசடி: நீதிபதி கவலை

சைபர் குற்றங்கள் வாயிலாக 6 மாதங்களில் ரூ.500 கோடி மோசடி: நீதிபதி கவலை

சைபர் குற்றங்கள் வாயிலாக 6 மாதங்களில் ரூ.500 கோடி மோசடி: நீதிபதி கவலை

ADDED : மார் 17, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''சைபர் குற்றங்கள் வாயிலாக, கடந்த ஆறு மாதங்களில், நம்நாட்டில், 500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது,'' என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா' மற்றும் இந்திய தரவு பாதுகாப்பு வல்லுநர்கள் நிறுவனம் சார்பில், 'சைபர் பாதுகாப்பு மிக அவசியம்: மனிதனுக்கா அல்லது தகவலுக்கா' என்ற தலைப்பில், நேற்று சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:

தற்போது நாம், செயற்கை நுண்ணறிவு, ரோபோ என, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இணைய பாதுகாப்பு என்பது, மனிதனுக்கு மட்டுமின்றி, தகவல்களுக்கும் தேவை.

நம்மில் பலரும், இந்த செயற்கை நுண்ணறிவு சாதனங்களையும், டிஜிட்டல் உலகையும், மனிதன் கட்டுப்படுத்தி வருவதாக கூறுகின்றனர். அது தவறு. இந்த டிஜிட்டல் சேவையே, மனிதர்களை கட்டுப்படுத்தி வருகிறது.

ஐம்புலன்களின் செயல்பாட்டில் இயங்கியவன் மனிதன். தற்போது, உணவு, உறக்கம், வேலை, ஓய்வு என, மனிதனின் அன்றாட தேவைக்கான நேரத்தை, 'டிஜிட்டல் சாதனங்கள்' தீர்மானிக்கின்றன. அதிகரித்து வரும், சைபர் குற்றங்களுக்கு டிஜிட்டல் சேவையே முதன்மை காரணம்.

பொது வெளியில் தவறு செய்ய அச்சப்படும் பலரும், டிஜிட்டல் உலகில் சாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, பலரது தவறான எண்ணங்களை செயல்படுத்தும் இடமாக, 'டிஜிட்டல் சேவை' உள்ளது.

தற்போது, ஒருவரின் அடையாளத்தை அறிய, அவரது பெயர், ஊர் உள்ளிட்ட முகவரி தேவையில்லை, மாறாக அவரது இணைய பயன்பாடு, அவற்றை பயன்படுத்தும் விதம், சேவையின் விபரம் உள்ளிட்டவற்றை பார்த்தாலே போதும், அவரின் உண்மை முகம் எளிதில் வெளிப்படும்.

சைபர் குற்றங்களில், 'சைபர் சிலேவரி' மிகவும் மோசமானது. பலரும் இது குறித்து அறிந்திருக்கவில்லை. சைபர் சிலேவரி என்றால், ஐ.டி., வேலை எனக்கூறி, வெளிநாட்டிற்கு ஆட்களை அழைத்து சென்று, அங்கு கொத்தடிமையாக வைத்து, சைபர் குற்றங்களில் ஈடுபட வைப்பதாகும். 'சைபர்' குற்றங்கள் வாயிலாக, கடந்த ஆறு மாதங்களில், நம்நாட்டில், 500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில், முன்னாள் நீதிபதி பிரகாஷ், தரவு பாதுகாப்பு ஆலோசகர் நாவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us