Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?

வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?

வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?

வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?

ADDED : ஜூலை 22, 2024 12:07 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மத்திய அரசு, அதன் வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகிச் செல்லத் துவங்கி உள்ளதோ என்ற சந்தேகம், சமீபமாக வலுவடைந்து கொண்டே வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வங்கி, பங்குச் சந்தை ஆகிய துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் துவங்கியது.

இதைத் தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளில், பல்வேறு விதங்களில் வசூலிக்கப்பட்டு வந்த மறைமுக வரி வருவாயை, ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்தியது.

வங்கித்துறை, பங்குச் சந்தை, மறைமுக வரி வருவாய் என மூன்றிலும் அரசு எடுத்த முடிவுகள், பெரிய அளவில் வெற்றியே கண்டது. ஆனால், இப்போது அதற்கு எதிர்திசையில் செல்லத் துவங்கி இருக்கிறது.

ஜி.எஸ்.டி., தரவுகள் நிறுத்தம்


மத்திய அரசு ஒவ்வொரு மாதத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த தரவுகளை, மாதம் முடிவடைந்ததும் வெளியிடுவது வழக்கம். ஆனால், ஜூன் மாத தரவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஜி.எஸ்.டி., குறித்த மாதாந்திர தரவுகள் வெளியிடுவதை அரசு நிறுத்தியுள்ளதாகவும், இனி இதுகுறித்த தரவுகள் வெளியிடப்படாது என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் ஜி.எஸ்.டி., வருவாய், அரசு கூடுதல் வரி வசூலிப்பது போன்ற பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களை அதிருப்தி அடைய செய்வதாகக் கருதி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அது அப்படித்தான் என்றால் அது முற்றிலும் ஒரு தவறான பார்வை.

கூடுதல் வரி வசூலிக்கப் படுவதால், ஜி.எஸ்.டி., வருவாய் உயரவில்லை; வரி வசூலிக்கும் முறையை விரிவுபடுத்தியதாலேயே, வருவாய் அதிகரித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், தற்போது ஜி.எஸ்.டி., முறையின் கீழ், சராசரியாக 11.60 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இது, ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் குறைவே.

மேலும், ரீபண்டுகளை கணக்கில் கொண்ட பிறகு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசுக்கு கிடைக்கும் வருவாயின் பங்கு, தற்போது தான் ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.

அதனால், அதிகாரப்பூர்வ ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்துவதற்கு பதிலாக, வருவாய் அதிகரிப்புக்கான காரணங்களை மக்களிடையே தெளிவாக எடுத்துரைக்கத் தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல்; பல்வேறு கொள்கை ரீதியான முடிவுகள் எடுப்பதில், அரசு தரவுகள் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நடைமுறையை மீண்டும் துவங்குவது அவசியமாகும். அதுவே நாட்டை தொடர்ந்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும்.

பங்குச் சந்தையில் கட்டுப்பாடு


கொரோனாவுக்கு முன் பொதுமக்கள் பங்குச் சந்தைகளில் பங்கேற்பது குறைவாக உள்ளது என்று செபியும், அரசு அதிகாரிகளும் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு, இது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. இப்போது மக்கள், முன்பேர வணிகங்களில் அதிகளவில் பங்கேற்கின்றனர் என இவர்கள் கவலை கொள்ளத் துவங்கியுள்ளனர்.

தற்போது, உலகளவில் ஆப்ஷன்ஸ் பிரிவு வர்த்தகத் தில் 90 சதவீதம், இந்தியாவிலேயே நடக்கிறது. இது கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் 35 சதவீதமாக இருந்தது. இந்த உயர்வுக்கு செபியும் ஒரு வகையில் காரணம். இப்பிரிவில் முதலீட்டாளர்கள் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், முதலீட்டு வரம்பை தளர்த்தி, அதற்கான குறியீடுகளை அதிகரித்தது.

இதுபோல நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, இப்போது கொழுந்துவிட்டு எரியும் வர்த்தகத்தை குளிர்விக்க முயற்சிக்கின்றனர். இதுமட்டுமல்ல; 'ஸ்மால் கேப்' மற்றும் 'மிட் கேப்' பிரிவுகளில், பொதுமக்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளதாகவும், செபி கவலை தெரிவித்து வருகிறது.

முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை விட்டுவிட்டு, அதைத் தவிர்க்க செய்யும் முயற்சிகளில் இறங்கச் செய்வது எப்படி சரியாக இருக்கும்?

வங்கிக்கடனில் கடுமை


ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பதற்காக, 'ஜன் தன்' திட்டம் துவங்கப்பட்டது. இது பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். அதன் காரணமாகவே பிரதமர் துவங்கி மத்திய அமைச்சர்கள் பலரும், 'ஜாம்' என சுருக்கமாக அழைக்கப்படும் ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் நம்பர் ஆகிய மூன்றின் இணைப்பை மிக முக்கிய வெற்றியாக அடையாளப்படுத்தினர்.

அவ்வாறு அடையாளப்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை. கொரோனா காலத்தின் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்க இது மிகவும் பயன்பட்டது. ஆனால், தற்போது வங்கிக் கணக்குகளின் அணுகலை விரிவுபடுத்தியதன் விளைவை எதிர்கொள்ள முடியாமல் அரசும், ரிசர்வ் வங்கியும் தவித்து வருகின்றன.

வங்கிக் கணக்கு வசதியை பெற்ற சில நாட்களிலேயே, மக்களின் ஆர்வம் டிபாசிட் செய்வதை விட்டுவிட்டு, கடன் வாங்குவதை நோக்கிச் செல்லத் துவங்கிவிடும். இதுவே தற்போது நடந்து வருகிறது. இதன் காரணமாகவே 25 முதல் 30 சதவீத வளர்ச்சியுடன், தனிநபர் பிரிவு கடன்களின் வளர்ச்சி, மற்ற பிரிவுகளைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களது வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்களைக் கவரும் வகையில், கடன் திட்டங்களை வடிவமைக்கத் துவங்கியதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் நிலைமை கட்டுக்குள் வராததால், இக்கடன்களை வழங்கவும் பெறவும் ஏற்படும் செலவை, ரிசர்வ் வங்கி கடந்தாண்டு உயர்த்தியது.

இது ஒருபுறமிருக்க, தனியார் வங்கிகளின் சில்லரைக் கடன்களில், வாராக் கடன் அதிகரித்து வருவதாக, நிதி ஸ்திரத்தன்மை குறித்த ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்தும் அறிகுறியே


ஆகமொத்தம், வங்கிக் கணக்கு துவங்க மக்களை ஊக்குவித்த அரசும் ரிசர்வ் வங்கியும், தற்போது அதை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.

அதிகாரப்பூர்வ ஜி.எஸ்.டி., தரவுகள் வெளியீடு நிறுத்தம், பங்குச் சந்தை முன்பேர வணிகத்தில் கட்டுப்பாடு, தனிநபர் கடன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மறுபரிசீலனை தேவை.

மொத்தத்தில், ஜி.எஸ்.டி., வருவாய் உயர்வு குறித்த அரசின் பார்வை முற்றிலும் தவறானது. இது திருத்திக் கொள்ளப்பட வேண்டும். அதே வேளையில், ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் கவலைகள் நியாமானது தான்.

இருப்பினும், மக்களிடையே உள்ள உத்வேகத்தை கொன்றுவிடாமல், இந்த சிக்கல்களை இன்னும் நுணுக்கமாகக் கையாள வேண்டியது அவசியம். ஏனென்றால், தற்போது நாம் எதிர்கொண்டு வருகிற அனைத்துமே, நமது பொருளாதாரம் முதிர்ச்சியடைந்து வருவதன் அறிகுறிகள் தான்!

ஜி.எஸ்.டி., வளர்ச்சிக்கான பல முயற்சிகளை எடுத்து சாதித்துவிட்டு, இப்போது தரவுகள் வெளியீட்டை நிறுத்தியுள்ளது, முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறை

எல்லோருக்கும் வங்கிக் கணக்கு வேண்டும் என, 'ஜன் தன்' எல்லாம் ஆரம்பித்து விட்டு, இப்போது தனிநபர் கடன் வளர்ச்சி குறித்து எச்சரிக்கிறது, ரிசர்வ் வங்கி

பங்கு சந்தையில் வணிகம் செய்வதை ஊக்குவித்துவிட்டு, இப்போது, 'ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளில் பொதுமக்கள் பங்கேற்பது குறித்து, 'செபி' கவலை தெரிவிக்கிறது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us