Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா பாழாகும் அவலம்

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா பாழாகும் அவலம்

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா பாழாகும் அவலம்

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா பாழாகும் அவலம்

UPDATED : ஜூலை 21, 2024 05:57 AMADDED : ஜூலை 21, 2024 05:35 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சேலம் - கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் 1,164 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, உயர்தர கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் - கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள வி.கூட்ரோட்டில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான 1,102 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,164 கோடி மதிப்பில், ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா (உயர்தர கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம்) , கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

சேலம் - சென்னை நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கால்நடை பூங்கா பரந்து விரிந்து காணப்படுகிறது. இவ்வளாகம் மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவக் கல்லுாரியும், இரண்டாவது பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அதிலிருந்து உப பொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் வசதி உள்ளது.

மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பயிலரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களின் ஒருங்கிணைந்த இணைப்பு மையமாக செயல்படும் வகையில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு உயர்ரக கலப்பின பசுக்களை உற்பத்தி செய்வதற்கும், அதிநவீன ஆராய்ச்சி கூடங்களில் கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்து ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் இவைகளின் உற்பத்தியை பெருக்குவதற்குமான உயர் ஆராய்ச்சி கருவிகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கலப்பின ரக கால்நடைகளை விவசாயிகள் நேரடியாக பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பால், இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றை பாதுகாத்து, பதப்படுத்தி அவற்றில் இருந்து உபபொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கால்நடை பூங்கா வளாகத்தில் 118 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரி மட்டுமே கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மற்ற பிரிவுகள் எதுவும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதன் காரணமாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 150க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாழடைந்து முட்புதர்கள் வளர்ந்து வீணாகி வருகிறது. இறைச்சி பதப்படுத்தும் கட்டடம் அமைந்துள்ள வளாகம் எவ்வித பாதுகாப்பும் இன்றி திறந்து கிடப்பதால், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது.

இவ்வளாகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு 110 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து 100 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. இப்பகுதி சர்வே செய்து அளவை கல் நட்டதோடு சரி, மற்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது.

கால்நடை அறிவியல் நிலையத்தில் 500 பசு மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உப பொருட்களை தயாரித்து மிகப்பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கி புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், ஆவின் நிர்வாகம் இங்கு செயல்படுத்த வேண்டிய திட்டம் துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு கானல் நீராகி உள்ளது.

இங்கு ஆடு, கோழி, மீன், பன்றி வளர்த்து அதன் இறைச்சிகளை பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன குளிர்சாதன கூடம் அமைத்த நிலையில், அவை அனைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து கிடக்கிறது.

மிக முக்கியமாக, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான உயர் ஆராய்ச்சி நிலையம் இதுவரை திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இதற்காக பலகோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டடம் காட்சி பொருளாகி கடந்த 3 ஆண்டுகளாக பாழடைந்து வருகிறது.

இங்குள்ள உயர்தர ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அறிவியல் மையத்தை வழிநடத்த இயக்குனர் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார். இவர், எப்போதாவது தான் இங்கு விசிட் செய்வதாக தகவல் கிடைத்தது.

இதன் காரணமாக, இம்மையம் பயன்பாட்டிற்கு வருவது கேள்விக் குறியாகி உள்ளது. ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் என்பது பெயரளவிற்கு மட்டுமே உள்ளதே தவிர, கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை.

புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களும், அதிநவீன கருவிகளும் பயன்படுத்தப்படாமலேயே பாழாகி வருகிறது. இம்மையம் திறக்கப்பட்டால் இப்பகுதியில் கால்நடை மற்றும் கோழி உற்பத்தியை பெருக்கி பெருமளவில் பயனடையலாம் என எதிர்பார்த்த விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கால்நடை ஆராய்ச்சி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us