தி.மு.க., ஓட்டு சரிவு ஏன்? ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
தி.மு.க., ஓட்டு சரிவு ஏன்? ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
தி.மு.க., ஓட்டு சரிவு ஏன்? ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
ADDED : மே 30, 2025 05:16 AM

திருப்பூர் : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் களப்பணியை முடுக்கிவிட தொகுதிவாரியாக கட்சியினரை சந்தித்து கூட்டங்களை நடத்தி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
ஆளுங்கட்சியான தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சிக்கான மாவட்டங்களை பிரித்து, சட்டசபை தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் வாயிலாக கூட்டங்களை நடத்த துவங்கி விட்டனர். கடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று கொடுத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, கட்சி தலைமையிடம் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளது.
இவர், கட்சி மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து, செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை செய்தார். தி.மு.க., வென்ற தொகுதிகளை தக்கவைக்கவும், புதிய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளையும் அப்போது வழங்கினார்.
கூட்டத்தில், செந்தில் பாலாஜி பேசியதாவது: இன்னும், ஆறு மாத காலத்துக்குள் திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் தொகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த பூத்களில் ஓட்டுகள் சரிந்தன என்பது குறித்து கணக்கெடுக்க வேண்டும். பா.ஜ.,வினர் எந்தெந்த பூத்களில் அதிக ஓட்டுகளை பெற்றனர்; அந்த இடத்தில், தி.மு.க.,வுக்கு ஏன் சரிவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் திரட்டப்பட வேண்டும். பலவீனமாக உள்ள அனைத்து பகுதிகளிலும், களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.