Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ ஆளுங்கட்சியினர் தவறுகளை சேகரியுங்கள்: கட்சியின் மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

ஆளுங்கட்சியினர் தவறுகளை சேகரியுங்கள்: கட்சியின் மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

ஆளுங்கட்சியினர் தவறுகளை சேகரியுங்கள்: கட்சியின் மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

ஆளுங்கட்சியினர் தவறுகளை சேகரியுங்கள்: கட்சியின் மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

Latest Tamil News
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்களின் இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று துவங்கியது.

நேற்று காலையும், மாலையும் இரு கட்டங்களாக, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவங்கை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு என, 42 மாவட்டச் செயலர்கள், 42 மாவட்டப் பொறுப்பாளர்கள் என 84 பேருடன், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்டச் செயலர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, செல்லுார் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர், தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து விவரித்தனர்.

மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து, நிர்வாகிகளின் செயல்பாடுகள், பூத் கமிட்டி விபரம், தொகுதிகளின் நிலவரம், பா.ஜ.,வின் பலம் தொடர்பாக, பழனிசாமி கேள்விகள் கேட்டுள்ளார். அதற்கான விளக்கத்தையும் பெற்றுள்ளார்.

பின்னர், அவர்களிடம் பேசிய பழனிசாமி, 'பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, வரும் ஜூன் இறுதிக்குள் முடித்து, அதன் விபரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும். இதில் எந்த தாமதமும் கூடாது. தங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெறுவதே, மாவட்டச் செயலர்கள் இலக்காக இருக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை முழுநேரமாக கட்சி பணியாற்ற வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளையும் பணியாற்ற வைக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.

பின், முக்கியமான விஷயம் என்று சொல்லி, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அனைத்து மாவட்டச் செயலர்களும் பின்பற்ற வேண்டும் என பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

'ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.,வினர் அராஜகம் குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் முழுமையாக சேகரியுங்கள்; அதை கட்சித் தலைமைக்கு அனுப்பி வையுங்கள். தகவல்களை முழுமையாக பார்த்துவிட்டு, தலைமை என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி செய்யுங்கள். பெரிய பிரச்னை என்றால், அதை தலைமையே முடிவெடுத்து போராட்டம் அறிவிக்கும். லோக்கல் பிரச்னை என்றால், நீங்களே முடிவெடுத்து லோக்கலில் போராட்டம் அறிவித்து, ஒவ்வொரு பிரச்னைக்கும் மக்கள் கவனம் ஈர்க்க வேண்டும். இதை, தேர்தல் நெருங்கும் வரை விடாமல் தொய்வின்றி செய்ய வேண்டும்' என பழனிசாமி கேட்டுக் கொண்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறின

-- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us