தேசிய அரசியலில் மகன் லோகேஷை சந்திரபாபு முன்னிலைப்படுத்துவது ஏன்?
தேசிய அரசியலில் மகன் லோகேஷை சந்திரபாபு முன்னிலைப்படுத்துவது ஏன்?
தேசிய அரசியலில் மகன் லோகேஷை சந்திரபாபு முன்னிலைப்படுத்துவது ஏன்?

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவரது மகன் நாரா லோகேஷ், 42, மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
தெலுங்கு தேசத்தின் பொதுச்செயலராகவும் பதவி வகிக்கும் அவர், கட்சியிலும், ஆட்சியிலும் தந்தைக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
முக்கியத்துவம்
ஆந்திர அரசியலில் கவனம் செலுத்தும் நாரா லோகேஷ், அதே சமயம், தேசிய அரசியலிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.
டில்லிக்கு அடிக்கடி செல்லும் அவர், மத்திய அரசின் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை, டில்லிக்கு நாரா லோகேஷ் பல முறை சென்று வந்துள்ளார். இதில், இரு முறை பிரதமர் மோடியை சந்தித்தார்.
மே மாதம் நடந்த முதல் சந்திப்பில், தன் மனைவி பிராமணி, மகன் தேவன்ஷ் ஆகியோரை நாரா லோகேஷ் அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியுடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடினார். சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடியை அவர் மீண்டும் சந்தித்தார்.
அப்போது, ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை திறக்கப்படும் என அறிவித்ததற்கும், ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் செய்ததற்கும் நன்றி தெரிவித்தார். நாரா லோகேஷ் டில்லி செல்லும் போதெல்லாம், அவரை வரவேற்க தெலுங்கு தேசம் எம்.பி.,க்களும், கூட்டணி கட்சியான ஜனசேனா எம்.பி.,க்களும் முன்கூட்டியே விமான நிலையத்தில் ஆஜராகி விடுகின்றனர்.
நெருக்கம்
பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை நாரா லோகேஷ் சந்திக்கும் போது, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடியின் 3.0 ஆட்சியில், தெலுங்கு தேசத்தின் ஆதரவு மிகவும் அவசியமானது என்பதால், மத்தியில் அக்கட்சிக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.
இதனால், மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்கு, நாரா லோகேஷுக்கு உடனே, 'அப்பாயின்ட்மென்ட்' கிடைக்கிறது. சொல்லப் போனால், அப்பாயின்ட்மென்டே இல்லாமல் கூட எளிதாக மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்கிறார்.
சமீபத்திய டில்லி பயணத்தின் போது, ஒரே நாளில், எட்டு மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ., மேலிடத் தலைவர்களுடன் நெருக்கமாக பழகி வருவதால், டில்லியில் அதிகார மையமாகவும் நாரா லோகேஷ் விளங்குகிறார்.
- நமது சிறப்பு நிருபர் -