Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ இளம் வயதில் திடீர் மரணம் ஏன்? மரபணு ரீதியாக பரவும் இதய நோய் பாதிப்பு

இளம் வயதில் திடீர் மரணம் ஏன்? மரபணு ரீதியாக பரவும் இதய நோய் பாதிப்பு

இளம் வயதில் திடீர் மரணம் ஏன்? மரபணு ரீதியாக பரவும் இதய நோய் பாதிப்பு

இளம் வயதில் திடீர் மரணம் ஏன்? மரபணு ரீதியாக பரவும் இதய நோய் பாதிப்பு

Latest Tamil News
தினமும் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு பழக்கம், புகை, மது என எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இளம் வயதினர் திடீர் மாரடைப்பில் உயிரிழப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

கல்யாண வீட்டில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்; உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வீடு திரும்பிய இளம் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்; தடகள வீரர்களுக்கு கூட திடீர் மாரடைப்பு ஏற்படுவதை நாம் செய்திகளில் காண்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம், 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' என்கின்றனர் டாக்டர்கள். இந்த அரியவகை இதய பாதிப்பு குறித்து, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான, ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.

ஆராய்ச்சி


ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதி உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு உள்ளவர்களுக்கு இதயத்தின் தசைகள் அசாதாரணமாக தடிமனாகிறது. இதனால் ரத்தத்தை, 'பம்ப்' செய்ய இதயம் திணறுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

இதன் காரணமாகவே, சிறிய வயதினர் கூட திடீரென மாரடைப்பில் உயிரிழப்பதாக சித்திரை திருநாள் மருத்துவமனையின் இதயவியல் தலைவர் டாக்டர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு, 500 பேரில் ஒருவருக்கு மரபணு ரீதியில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பரிசோதனை


குடும்பத்தில் உள்ள யாருக்காவது ஏற்கனவே, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கு இந்த மரபணு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மரபணு மாற்றம் ஏற்படுபவர்களுக்கு மிக இளம் வயதிலேயே, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, குடும்பத்தில் யாருக்காவது, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு இருந்தால், முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்வது வருமுன் காக்க உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காரணம், மரபணு வாயிலாக, 50 சதவீத நோய்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம் என்பதே கசப்பான உண்மை.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us