ராணுவத்துக்கு எதிராக கருத்து; விபரம் சேகரிக்குது பா.ஜ.,
ராணுவத்துக்கு எதிராக கருத்து; விபரம் சேகரிக்குது பா.ஜ.,
ராணுவத்துக்கு எதிராக கருத்து; விபரம் சேகரிக்குது பா.ஜ.,
ADDED : மே 28, 2025 02:04 AM

சென்னை : இந்திய இறையாண்மை மற்றும் நாட்டின் ராணுவத்துக்கு எதிராக, கருத்து பதிவிட்டவர்களின் விபரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, பின்னணி குறித்து விசாரிக்க வலியுறுத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில், கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில், நம் நாட்டு ராணுவம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வான்வழி தாக்குதல் வாயிலாக தகர்த்தது.
இதை தமிழகத்தில் சிலர் விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சட்ட விரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேச நாட்டினரை வெளியேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும், தமிழக பா.ஜ., சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர்களிடம் பா.ஜ.,வினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், ராணுவத்தினரை விமர்சித்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, பின்னணி குறித்து விசாரிக்க வலியுறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசியமும், தெய்வீகமும் தழைத்தோங்கும் தமிழகத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை பதிவிடுவது என்பது, இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.
'ஆப்பரேஷன் சிந்துாரில்' இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச விரோதமாகவும், நம் ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், சமூக ஊடகங்களில் சிலர் பேசியும், எழுதியும் வந்தது, நம்மை வெகுவாக வேதனை அடைய செய்தது.
எனவே, இதுபோன்ற கருத்துகளை பதிவிட்ட நபர்களையும், பதிவுகளையும் பட்டியலிடும் பணி நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.