Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு

மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு

மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு

மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு

ADDED : ஜூன் 27, 2025 12:09 PM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறை முன் உள்ள சிறிய அர்த்த மண்டபத்தில், ஆளுங்கட்சியினரின் நெருக்கடியால், வி.ஐ.பி.,க்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது.

இதனால் அம்மன் சிலைக்கு பாதுகாப்பு இருக்காது என, ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அம்மன் கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தை அடுத்த நடைமேடையிலும், அதற்கு கீழ் உள்ள பகுதியிலும் வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மனை அர்த்த மண்டபத்தில் எட்டும் துாரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் முயற்சித்து, கோவில் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் 'அம்மன் சிலைக்கும், கோவிலுக்கும் பாதுகாப்பு இருக்காது' என, ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கின்றன. ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது: அர்த்த மண்டபம் வரை, 30 ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 1994ல் மர்ம நபர் அர்த்த மண்டபத்தில் தடை செய்யப்பட்ட பொருளை வைத்துவிட்டு சென்றார்.நல்லவேளையாக உடனே கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அம்மன் சிலைக்கும், அர்த்த மண்டபத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இச்சம்பவத்திற்கு பிறகே அர்த்த மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தற்போது ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், மீண்டும் அர்த்த மண்டபத்தில் நின்று வி.ஐ.பி.,க்கள் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கூறி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அர்த்த மண்டபம் சிறியது. ஒரே நேரத்தில், 10 பேர் நிற்பது சிரமம். அப்படி வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்யும்போது, கட்டணம் செலுத்தி வரிசையில் வரும் பக்தர்கள் அம்மனை தரிசிப்பதில் சிரமம் ஏற்படும்.

பாதுகாப்பு கருதி பக்தர்களை சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர். ஆனால், வி.ஐ.பி.,க்களையும், அவர்களுடன் வருவோரையும் போலீசார் சோதனை செய்வதில்லை. அப்படி வருபவர்களில் யாராவது ஒருவர், அர்த்த மண்டபத்தில் ஏதாவது ஒரு தடை செய்யப்பட்ட பொருளை வைத்தால் யார் பொறுப்பேற்பது.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இதில் கவனம் செலுத்துவதற்கு பதில், தரிசன கட்டணத்தை ரத்து செய்ய முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவேறாத ஆசை

தற்போதைய அறங்காவலர் குழுத்தலைவரான ருக்மணியின் கணவரும், அமைச்சர் தியாகராஜனின் தந்தையுமான பழனிவேல்ராஜன், மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். அவர் சபாநாயகராக இருந்த போது அர்த்த மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்க முயற்சி எடுத்தார்.நிர்வாக காரணங்களாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

பின், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அவர் பதவி ஏற்றார். 'அமைச்சராக மதுரை வரும்போது மீனாட்சியை அர்த்த மண்டபத்தில் நின்று தான் தரிசிப்பேன்' என, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதிகாரிகளும் அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வரும் போது காலமானார். இதனால் கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை என்கின்றனர் தி.மு.க.,வினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us