Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்

இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்

இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்

இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்

ADDED : ஜூன் 27, 2025 12:16 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கு, ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானியை, 33, இடதுசாரி பைத்தியம் என குறிப்பிட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

11 பேர் போட்டி


தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் என்பவர் நியூயார்க் மேயராக உள்ளார். வரும் நவம்பரில் நடக்க உள்ள மேயர் தேர்தலில், இவர் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக களமிறங்க, இந்திய வம்சாவளி ஜோஹ்ரான், நியூயார்க் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரு கியூமோ உட்பட 11 பேர் போட்டி போட்டனர். இதற்கான முதன்மை தேர்வு சுற்றில் அதிக ஓட்டுகள் பெற்று, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டார்.

இதன் வாயிலாக, நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் முஸ்லிம் வேட்பாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இவரின் தாய் மீரா நாயர், ஒடிசாவைச் சேர்ந்தவர்; சினிமா இயக்குநர். சலாம் பாம்பே, காமசூத்ரா: ஏ டேல் ஆப் லவ் ஆகிய படங்களை இயக்கியவர். இவரின் தந்தை மஹ்மூத் மம்தானி, குஜராத் முஸ்லிம்.

ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயக சோஷியலிஸ்டாக தன்னை அடையாளப்படுத்துகிறார். மேலும், அயோத்தி ராமர் கோவில் குறித்தும் இவர் 2020ல் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியையும் இவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தீவிர இடதுசாரி கொள்கை உடைய ஜோஹ்ரானை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புத்திசாலி இல்லை


அதில் கூறியுள்ளதாவது: இறுதியாக அது நடந்துவிட்டது. ஜனநாயக கட்சியினர் எல்லை மீறியுள்ளனர். ஜோஹ்ரான் மம்தானியை ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தேர்வில் வெற்றி பெற செய்துள்ளனர். 100 சதவீத கம்யூனிஸ்ட் பைத்தியக்காரரான இவர் மேயர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

இதற்கு முன்னரும் தீவிர இடதுசாரிகள் இருந்துள்ளனர். ஆனால் இவர், அவர்கள் அனைவரையும் விட பைத்தியக்காரர். மிகவும் மோசமான அரசியல் பிம்பம் உடைய அவரது குரல் எரிச்சலுாட்டுகிறது. ஜோஹ்ரான் ஒன்றும் அவ்வளவு புத்திசாலி இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பாகிஸ்தானி போல் பேசுகிறார்


ஜோஹ்ரானின் தாய் சிறந்த இயக்குநர். ஒடிஷாவை சேர்ந்த இவர் குஜாரத்தியான மெஹ்மூத் மம்தானியை திருமணம் செய்தார். அவர்களது மகன், இந்தியர் என்பதை விட பாகிஸ்தானியர் போலவே தெரிகிறார். ஹிந்து மதத்தை அழிக்க தயாராக உள்ளார்.-கங்கனா ரனாவத், லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,




நமக்கு எதிரிகளே தேவையில்லை


ஜோஹ்ரான் மம்தானி வாய் திறக்கும் போதெல்லாம்,​பாகிஸ்தானின் மக்கள் தொடர்பு துறையினர் விடுமுறை எடுத்துக் கொள்வர். இந்தியாவுக்கு எதிரிகளே தேவையில்லை. நியூயார்க்கிலிருந்து கதை அளந்துவிடும் இவரை போன்ற கூட்டாளிகளே போதும்.-அபிஷேக் சிங்வி, ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்




சுதந்திர தேவி சிலைக்கு பர்தா!


முஸ்லிமான ஜோஹ்ரான் மம்தானியை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்ததால், டிரம்ப் ஆதரவாளர், நியூயார்க்கில் உள்ள உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்திருப்பது போல் படத்தை எடிட் செய்து, சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us