சாலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு: 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்
சாலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு: 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்
சாலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு: 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்

உத்தர கன்னடா: கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கடந்த 12 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை. இங்குள்ள ஆண்கள், பிரம்மச்சாரிகளாகவே காலம் கழிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் அருகே மச்சள்ளி கிராமம் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தத்தளிக்கின்றனர். பள்ளியோ, ஆரம்ப சுகாதார மையமோ இல்லை. முக்கியமாக சாலையே இல்லை.
பிரம்மச்சாரிகள்
கரடு முரடான மண் சாலையில் தான் கிராமத்தினர், பக்கத்து கிராமங்களுக்கும், நகரப்பகுதிக்கும் சென்று வர வேண்டும். சாலை சரியில்லை என்ற ஒரே காரணத்தால் மச்சள்ளி கிராமத்தின் ஆண்களுக்கு பெண் கொடுக்க, யாரும் முன்வரவில்லை.

பெண் பார்க்க செல்லும் இடங்களில், மச்சள்ளி கிராமத்தின் பெயரை கூறினாலே பெண் கொடுக்க மறுக்கின்றனர். இதனால், கடந்த 12 ஆண்டுகளாக இங்கு திருமணங்களே நடக்கவில்லை. திருமணம் செய்யாமல், ஆண்கள் பலரும் பிரம்மச்சாரிகளாக காலம் கடத்துகின்றனர். இக்கிராமத்தில் முதியவர்கள் மட்டுமே, அதிகம் வசிக்கின்றனர். குழந்தைகளே இல்லை.
- கிராமத்தை விட்டு செல்ல விரும்பினாலும், முடியவில்லை. இங்கு சொந்த நிலம், வீடுகள் வைத்துள்ளனர்.
- இவற்றை வாங்கவும் ஆள் இல்லை. இதனால் கிராமத்தை விட்டுச் செல்ல முடியாமல், இங்கேயே வசிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கிராமத்தினர் கூறியதாவது:
- எங்கள் கிராமம் கார்வாரில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது. இங்கு, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அடர்ந்த வனம் சூழ்ந்த கிராமமாகும்.
- கிராமத்துக்கு செல்ல 4 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியை கடந்து வர வேண்டும். பாதை நெடுகிலும், பெரிய பாறைகள், மண் மேடு நிறைந்துள்ளது. சாலை பக்கத்திலேயே ஆழமான பள்ளம் உள்ளது. சிறிது கவனம் சிதறினாலும், அசம்பாவிதத்தை தவிர்க்க முடியாது.
- மண் சாலை மத்தியிலேயே, ஓடை பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை பெய்தால், செல்லவே முடியாது.
பயனில்லை
இந்த பாதையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும். சாலை வசதி செய்யும்படி, பல ஆண்டுகளாக அரசிடம் மன்றாடியும் பயன் இல்லை. ஒரு மருத்துவமனை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.