விஜய் மீது வேல்முருகன் தாக்கு: த.வெ.க., தொண்டர்கள் கொதிப்பு: சபாநாயகருக்கு அவசர கடிதம்
விஜய் மீது வேல்முருகன் தாக்கு: த.வெ.க., தொண்டர்கள் கொதிப்பு: சபாநாயகருக்கு அவசர கடிதம்
விஜய் மீது வேல்முருகன் தாக்கு: த.வெ.க., தொண்டர்கள் கொதிப்பு: சபாநாயகருக்கு அவசர கடிதம்
ADDED : ஜூன் 06, 2025 02:15 AM

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தது, த.வெ.க., தொண்டர்களை கொதிப்படைய வைத்து உள்ளது.
சேலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் பேசியதாவது:
இன்னிக்கு யாரோ இரண்டு படத்தில் நடித்துவிட்டு, நான் தான் தமிழகத்தின் முதல்வர் என்கிறார். இரண்டு கிராம் தங்கப்பரிசு கொடுத்ததும், நம்ம முட்டாள்பயல் என்னவெல்லாம் செய்கிறான் தெரியுமா? நான் நடிகர்களை குறை சொல்ல மாட்டேன்.
நிற்கக்கூடாது
நடிகன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, வீட்டில் இருக்கும் பெண்ணை நம்மாளு அழைத்துச் செல்கிறான். அங்கு போய் என்னவெல்லாம் செய்கிறான் தெரியுமா; சொந்தமாக புத்தி வேண்டாமா?
வயது பெண், தன் தந்தை, தாய், ஆயிரக்கணக்கான நபர்கள் முன், ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிறதை எப்படி அனுமதிக்க முடியும்? இதுதான் தமிழன் கலாசாரமா?
நடிகர்கள் யாராக இருந்தாலும், அவர்களை என்ன வேண்டுமானாலும் பாராட்டுங்க; நடிப்பை ரசிங்க. தயவுசெய்து, அவர்களின் வெறியர்களா மாறி கண்டதையும் பண்ணாதீங்க.
இது தமிழ் சமூகத்தோட அடையாளம் இல்லை. தமிழனோட கலாசாரம் இல்லை. எந்த நடிகர் வீட்டு வாசலிலும், தமிழ் பிள்ளைகள் போய் நிற்க வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு த.வெ.க., நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து வேல்முருகனை நீக்க வேண்டும் என, சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
த.வெ.க., தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரை, ஆண்டுதோறும் சந்தித்து கவுரவப்படுத்தி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர், விஜய் மீது இருக்கும் அன்பை, பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். தன் குழந்தைகள் போல் விஜய் அவர்களுடன் நடந்து கொள்கிறார்.
பள்ளி படிக்கும் குழந்தைகள், விஜயை கட்டிப்பிடிப்பது, அவர் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுவதை, சில அரசியல் சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இதை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அநாகரிகமாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி இருப்பதை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கண்டிக்கிறோம்.
மாணவியரையும், அவரது பெற்றோரையும், அருவருக்கத்தக்க வகையில், மிகவும் கீழ்த்தரமாக வேல்முருகன் பேசி இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகில்லை.
எம்.எல்.ஏ.,வாக இருந்துகொண்டு, தமிழக பெண் குழந்தைகள் குறித்தும், அவர்கள் பெற்றோர் குறித்தும் அநாகரிகமாக பொதுவெளியில் பேசியிருப்பது, வரலாற்று சிறப்புமிக்க சட்டசபைக்கு, மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
நடிகர் விஜய் மற்றும் மாணவியர் குறித்து பேசிய வேல்முருகனுக்கு, த.வெ.க., மற்றும் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தன்னுடைய கருத்தை வேல்முருகன் வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம் என த.வெ.க.,வினர் அறிவித்து உள்ளனர்.
அதேபோல, விஜய் ஆதரவாளரான நடிகர் தாடி பாலாஜி, விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று அறிவித்தார்.