Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 'இந்தியாவுக்கு வெளிநாட்டினரை பயன்படுத்தி தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது'

'இந்தியாவுக்கு வெளிநாட்டினரை பயன்படுத்தி தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது'

'இந்தியாவுக்கு வெளிநாட்டினரை பயன்படுத்தி தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது'

'இந்தியாவுக்கு வெளிநாட்டினரை பயன்படுத்தி தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது'

ADDED : ஜூன் 06, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பதால், இந்தியாவுக்கு, வெளிநாட்டினர் வாயிலாக அதிகளவில் தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வரும் போக்கு தற்போது அதிகரித்து வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், புதிய முறையில் வெளிநாட்டினரை கேடயமாக பயன்படுத்தி, இந்தியாவுக்கு அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் வாயிலாக, புதிய முறையில் தங்க கடத்தல் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

பறிமுதல்


கடந்த மார்ச் 6ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனில் இருந்து மும்பை வந்த இரு வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 21 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டை காலர் மற்றும் உள்ளாடையில் மறைத்து தங்கத்தை எடுத்து வந்துள்ளனர்.

கடந்த பிப்.14ல் துபாயில் இருந்து மும்பை வந்த மூன்று ஈரானியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஆடையில் மறைத்து கொண்டு வரப்பட்ட 7.14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று, ஜன.25ல், துபாயில் இருந்து மும்பை வந்த இரண்டு துருக்கி நாட்டை சேர்ந்தவர்களிடம் நடத்திய சோதனையில், சாக்ஸில் மறைத்து கொண்டு வரப்பட்ட 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே நேரம், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்துவதற்கு இந்தியர்களையும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

மார்ச் 3ல், துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த பெண் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 14.2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 12.56 கோடி ரூபாய் ஆகும்.

விமானத்தில் மட்டுமின்றி, அண்டை நாடுகளில் இருந்து சாலை, கடல் வழியாக தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் இருந்து ராமநாதபுரத்தின் தொண்டி வழியாக கடத்தி வரப்பட்ட 5.54 கிலோ தங்கம், மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில், பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு வழக்கில், 7.58 கிலோ தங்கம், வங்கதேசத்தில் இருந்து சாலை வழியாக கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்க காரணம்


கடந்தாண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.

எனினும், தங்க கடத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு, சந்தையில் தங்கத்தின் விலை அதிக விலைக்கு விற்பதும், முதலீடு என்ற வகையில், நல்ல லாபத்தை தருவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தேசிய பங்குச்சந்தை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில், தங்கம் அமெரிக்க டாலரின் மதிப்பில் 41 சதவீத லாபத்தையும், ரூபாய் மதிப்பில் 33 சதவீதம் லாபத்தையும் அளித்து உள்ளது.

சர்வதேச அளவில் புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது.

உலகளவில் மத்திய வங்கிகள், அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைத்து, அதிகளவில் தங்கத்தை வாங்கி குவித்தது மேலும் தங்கம் விலை உயர்வதற்கு காரணமானது.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 18 மாதங்களில், தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பில் 68 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 54 சதவீதமும் உயர்வை கண்டுள்ளன. இந்திய பங்குச்சந்தையின் நிப்டி 50 குறியீடு, இதே காலத்தில் 20 சதவீதம் மட்டுமே லாபத்தை அளித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us