விழலுக்கு இறைத்த நீராகும் அரசின் உதவித்தொகை! வேறு நலத்திட்டங்களுக்கு மடை மாற்ற எதிர்பார்ப்பு
விழலுக்கு இறைத்த நீராகும் அரசின் உதவித்தொகை! வேறு நலத்திட்டங்களுக்கு மடை மாற்ற எதிர்பார்ப்பு
விழலுக்கு இறைத்த நீராகும் அரசின் உதவித்தொகை! வேறு நலத்திட்டங்களுக்கு மடை மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 14, 2024 04:51 AM

கோவை : 'மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையை, வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த வேண்டும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்பும், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400, பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு 600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு 750, மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 1,000 ரூபாய் வீதம் மாதந்தோறும் வங்கிக் கணக்கில், இன்றளவும் செலுத்தப்படுகிறது.இந்த உதவித்தொகை பெற்றால், அரசின் மற்ற உதவித் தொகை கிடைக்காது என்ற நிபந்தனை, சமீப காலத்தில் விதிக்கப்பட்டதால், உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் கை கொடுக்கும் நிலையில், மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் வேலை வாய்ப்பு பெற்று வரும் நிலையில், எதற்காக இத்தொகை ஒதுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில், மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து, ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம், 200 பேருக்கு, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 350 ரூபாய் மாதத்துக்கு கணக்கிட்டாலும், 200 பேருக்கு, ஆண்டுக்கு 8.40 லட்சம் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்தில், 200 பேருக்கு கணக்கிட்டாலும், ஓராண்டுக்கு , 3.19 கோடி செலவிடப்படுகிறது.
மூன்று வருடங்களுக்கு, இத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில், மூன்று வருடங்களையும் சேர்த்தால், 10 கோடிக்கு மேல் தாண்டி விடும்.
வேலை வாய்ப்பு இல்லாத நிலையை உருவாக்க, இளைஞர்களுக்கு தொழில் கடன், தொழில் துவங்க பயிற்சி என, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இத்தொகை வழங்கப்படுவது தேவைதானா? இதைக் கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தலாமே என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.