தி.மு.க.,வில் வெடித்த கோஷ்டி மோதல்; இரு அணியின் பனிப்போர் வீதிக்கு வந்தது
தி.மு.க.,வில் வெடித்த கோஷ்டி மோதல்; இரு அணியின் பனிப்போர் வீதிக்கு வந்தது
தி.மு.க.,வில் வெடித்த கோஷ்டி மோதல்; இரு அணியின் பனிப்போர் வீதிக்கு வந்தது
ADDED : ஜூன் 17, 2025 12:54 AM

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக இருந்த பொன்முடிக்கு, மாநில பதவி வழங்கியதால், புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட செயலரானார்.
அவரது மறைவுக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம்சிகாமணிக்கு, விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தொகுதி அடங்கிய தெற்கு மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே, மாநிலம் முழுவதும் கூடுதல் மாவட்ட செயலர்கள் நியமித்தபோது, தி.மு.க., தலைமை உறுதியளித்தபடி டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ.,க்கு, கடந்தாண்டு விழுப்புரம், வானுார் தொகுதிகள் அடங்கிய மத்திய மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட்டது.
இதனால், விழுப்புரம் மாவட்ட தி.மு.க., வில் கோஷ்டி பிரச்னை ஏற்பட்டது. அமைச்சராக இருந்த பொன்முடி அதிருப்தியை வெளிக்காட்டாமல் இருந்தார்.
மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன், தீவிரமாக செயல்பட்டு செயல்வீரர்கள் கூட்டங்கள், நலத்திட்ட விழாக்கள் என தாராளமாக செலவிட்டு விழுப்புரம், கோலியனுார், கண்டமங்கலம், காணை, வானுார் ஒன்றியங்களில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்தி பிரமிக்க வைத்தார்.
தி.மு.க., வினரும் ஆர்வமாக திரண்டனர். இதில், பொன்முடி ஆதரவாளர்களில் சில முக்கிய நிர்வாகிகள் லட்சுமணன் நிகழ்வுகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
இந்நிலையில், சர்ச்சை பேச்சால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது, மஸ்தான் அல்லது லட்சுமணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை பொன்முடி தரப்பு தடுத்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தது.
விழுப்புரத்தில் சமீபத்தில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பொறுப்பு அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், அன்று பொன்முடி தரப்பினர் ஏற்பாடு செய்த விக்கிரவாண்டி, திருக்கோவலூர், முகையூர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, பன்னீர்செல்வம் இரவு தாமதமாக வந்தார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் புறப்பட்டு சென்று விட்டனர். அது லட்சுமணன் தரப்புக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கோஷ்டி பிரச்னை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாள் நிகழ்வு விழுப்புரத்தில் நடந்தது. அதற்காக வந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை வரவேற்க பொன்முடி தரப்பினர் ஒருபுறமும், லட்சுமணன் தரப்பினர் ஒருபுறமும் காத்திருந்தனர்.
லட்சுமணன் வணக்கம் செலுத்தியதையும் ஏற்காத பொன்முடி, முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக நின்றிருந்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் வந்ததும், லட்சுமணன் தரப்பு முதலில் சால்வை அணிவித்து வரவேற்றது. பிறகு பொன்முடி சால்வை அணிவித்து வரவேற்றார். கட்சிக்குள் இருந்த பனிப்போர் தற்போது வீதிக்கு வந்து விட்டதாக, கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர்.