முருகனை போற்ற வாய்ப்பிழந்த ஸ்டாலின்; காடேஸ்வரா சுப்பிரமணியம் தகவல்
முருகனை போற்ற வாய்ப்பிழந்த ஸ்டாலின்; காடேஸ்வரா சுப்பிரமணியம் தகவல்
முருகனை போற்ற வாய்ப்பிழந்த ஸ்டாலின்; காடேஸ்வரா சுப்பிரமணியம் தகவல்

மாநாட்டில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வரவேற்று பேசியதாவது:
இந்த மாநாடு நடக்கக்கூடாது என, ஒரு கும்பல் தடைகளை ஏற்படுத்தியது. இது பலரின் எண்ணமாகவும் இருந்தது. வி.சி., தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் முருக பக்தர்கள் மாநாட்டை விமர்சனம் செய்து, இலவச விளம்பரங்களை தேடி தந்தனர்.
இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலையாய் மாநாட்டிற்கு வருகை தந்தனர்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கூட்டம் வரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு என்னவெல்லாமோ செய்தார். இறுதியில், விரதம் இருந்து முருகனை வேண்டிக் கொண்டார். இதற்காகவாவது, அவர் முருகனை வேண்டிக் கொண்டது, பாராட்டுக்குரியது.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, 400 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக செய்தி பரப்புகின்றனர். வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. 400 கோடி ரூபாய், எங்கிருந்து வந்தது, அதற்கான ஆதாரம் என்ன என்பதையெல்லாம் கூற வேண்டும்.
இது அரசு நிகழ்ச்சி அல்ல; இவ்வளவு செலவழித்தோம் என பொய்க் கணக்கு எழுதுவதற்கு. முருக பக்தர்கள் மாநாட்டிற்கான வரவு - செலவு கணக்குகளை விரைவில் வெளியிடுவோம். யாருக்கு சந்தேகம் என்றாலும், அதை பார்த்து விபரம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சமயத்தில் கட்டாயம் இதைக் கூறியாக வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கும்பாபிஷேகங்களில் ஊழல்கள் நடக்கிறது என தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன்.
ஒவ்வொரு கும்பாபிஷேகத்துக்கும் யாரிடம் இருந்து எவ்வளவு தொகை நன்கொடையாக பெறப்பட்டது; எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்ற விபரங்களை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லை என்றால், அவர்களே ஊழலை ஒப்புக் கொண்டது போலத்தான்.
இந்த முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து முன்னணி மாநாடு அல்ல. முருக பக்தர்களும், ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள ஹிந்துக்களும் ஒன்று கூடி நடத்திய மாநாடு. தமிழகத்தில் ஆன்மிகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது; எங்களுக்கு ஆன்மிகத்தோடு அரசியல் தேவையில்லை.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இந்த மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை அனுப்பி வைத்தார். இதுபோல் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்தோம்.
முதல்வர் ஸ்டாலினுக்கும் நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் வழங்க நேரம் அளிக்குமாறு, கடிதம் மூலம் அனுமதி கேட்டிருந்தோம். அனுமதி கொடுக்கவில்லை. ஒருவேளை, அனுமதி அளித்திருந்தால், மிகப் பெரிய இந்த மாநாட்டு மேடையில் அவரும் பேசியிருக்கக்கூடிய வாய்ப்பு கிட்டியிருக்கும்.
மதுரை மாநாட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய ஆன்மிக புரட்சி ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.