அரசியல் பேசாமல் ஆன்மிகம்: அசத்திய நாகேந்திரன்
அரசியல் பேசாமல் ஆன்மிகம்: அசத்திய நாகேந்திரன்
அரசியல் பேசாமல் ஆன்மிகம்: அசத்திய நாகேந்திரன்
ADDED : ஜூன் 23, 2025 04:00 AM

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல் எதுவும் பேசாமல், ஆன்மிகம் பேசி முருகன் பாடலை மனமுருக பாடி அனைவரையும் அசத்தினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரக்கடவுள் இருப்பார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகா... முருகா.. எனச் சொன்னால் உருகாதோர் யாரும் இல்லை.
முருகன் என்பதில் 'மு' என்றால் முகுந்தன். 'ரு' என்றால் ருத்ரன். 'க' என்றால் கமலத்தில் வீற்றிருக்கும் பிரம்மன் என பொருள். முருகா எனும் பெயரில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருப்பதால் முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம். மதுரை மண்ணில் முருக பக்தர்கள் மாநாடு நடப்பது நமக்கெல்லாம் பெருமை.
இம்மாநாட்டிற்கு எத்தனையோ தடைகள் வந்தன. தடைகளை ஏற்படுத்தியது தமிழக அரசுதான். அரசிடம் இருந்து நமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், நீதிமன்றம் வாயிலாக நீதியை பெற்றோம்.
திருமுருகாற்றுப்படை, முருகனை வைத்து பாடப்பட்டது. அருணகிரிநாதர் பாடிய, 'முத்தைத் திரு...' பாடல் உருக வைக்கும். அவர் திருப்புகழ் உருவாக்கி தந்துள்ளார்.
திருப்புகழை பாடினால் வாய் மணக்கும். இங்கு, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளீர்கள். ஆதீனங்கள் மொத்தமாக அமர்ந்திருப்பதால் நல்ல 'வைபரேஷன்' உணர்கிறேன்.
தமிழ், தெலுங்கு என்பதால் கலாசாரம் மாறிவிடாது. ஏதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம்.
நம் கலாசாரம் ஒருமித்த கலாசாரம். அதை வளர்க்க தான் இந்த முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஆன்மிகம் நிறைந்து சொர்க்கபுரியாக, இந்த மேடை விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் மேற்கோள்கள் காட்டி தேர்ந்த ஆன்மிக பேச்சாளர் போல அவர் பேசினார். 'கோடிகள் குவிந்தாலும்...' எனும் மதுரை சோமு பாடலை பாடியும் அசத்தினார், நயினார் நாகேந்திரன்.