Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/தமிழக ஓலைச்சுவடிகளுக்கென தனி தரவு தளம்; மத்திய அரசின் 'ஞான பாரதம்' மாநாட்டில் கோரிக்கை

தமிழக ஓலைச்சுவடிகளுக்கென தனி தரவு தளம்; மத்திய அரசின் 'ஞான பாரதம்' மாநாட்டில் கோரிக்கை

தமிழக ஓலைச்சுவடிகளுக்கென தனி தரவு தளம்; மத்திய அரசின் 'ஞான பாரதம்' மாநாட்டில் கோரிக்கை

தமிழக ஓலைச்சுவடிகளுக்கென தனி தரவு தளம்; மத்திய அரசின் 'ஞான பாரதம்' மாநாட்டில் கோரிக்கை

ADDED : செப் 13, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
'தமிழகத்தின் ஓலைச்சுவடிகளில் பொதிந்துள்ள அறிவு பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில், அவற்றை பாதுகாக்க தனி தரவு தளம் உருவாக்க வேண்டும்' என, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பண்டைய காலங்களில் பின்பற்றிய ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட கையெழுத்து பிரதிகளில் காணப்படும் ஜோதிடம், இலக்கியம், மருத்துவம், புராண கால மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட விஷயங்களை மீட்டெடுக்கும் நோக்கில், மத்திய கலாசார அமைச்சகம் சார்பில், 'ஞானபாரதம் சர்வதேச மாநாடு' டில்லியில் நேற்று துவங்கியது.

நாளை வரை நடக்கும் இந்த மாநாட்டில், நாடு முழுதும் இருந்து ஏராளமான கையெழுத்து பிரதிகளின் ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். வெவ்வேறு பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்து கையெழுத்து பிரதிகளையும், ஒரே தளத்தில் கொண்டு வரும் எண்ணத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் இருந்து சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் சதீஷ் பங்கேற்று ஓலைச்சுவடி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார்.

அவர் கூறியதாவது:


தமிழகம் முழுதும் ஏராளமான ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை. அனைத்து ஓலைச்சுவடிகளும், ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் அளவுக்கு, சிறப்பான தரவுத் தளங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இதனால், ஓலைச்சுவடிகள் தொடர்பான அடிப்படை தரவுகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகளுக்கு என, 'நேஷனல் மிஷன் பார் மேனுஸ்கிரிப்ட்' என்ற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புடன், தமிழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் சார்ந்த, நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன் கூடுதல் விரிவாக்கமாக, 'ஞான பாரதம்' என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளில் பொதிந்துள்ள அறிவுப் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு கொண்டுவர முடியும்.

இந்த கருத்தரங்கில் திருநெல்வேலியில் பிறந்த தண்டபாணி சுவாமிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப்பித்தேன். அவருடைய மொத்த ஓலைச்சுவடிகளும், கோவை கவுமார மடத்தில், பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தண்டபாணி சுவாமிகளின் ஓலைச்சுவடிகளில் இருந்து, ஆய்வு பதிப்புகள் வெளியிடும் வகையில் கோவை கவுமார மடமும், 'தினமலர்' நாளிதழின், 'தாமரை பிரதர்ஸ்' பதிப்பகமும் சேர்ந்து, 19 தொகுதிகளை தயார் செய்துள்ளன.

இவற்றை, இலக்கியத்தின் வகைமை அடிப்படையில், பதிப்பிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு, கோவை கவுமார மடமும், 'தாமரை பிரதர்ஸ்' பதிப்பகமும் உதவி செய்து வருகின்றன. இது நிறைவடைந்தால், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய முழுமையாக பதிப்புகள் கிடைக்கும். துவக்கத்தில், கோவை கவுமார மடமும், உலகத்தமிழ் ஆராய்ச்சி மையமும் சேர்ந்து பிள்ளைத்தமிழ், கலம்பகம் ஆகியவற்றில், ஒவ்வொரு தொகுதிகள் கொண்டுவந்தன.

பின், மொத்த நூல்களையும், 'தாமரை பிரதர்ஸ்' பதிப்பகம் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஐந்து அந்தாதி தொகுதிகளும், ஒரு கோவை தொகுதியும், மூன்று சதகம் தொகுதிகளும், ஏழு ஏழாயிரப் பிரபந்த தொகுதிகளும் தற்போது வெளிவந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அறிவுசார் திருட்டை தடுக்கும்: மோடி - நமது சிறப்பு நிருபர் - கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான, 'ஞான பாரதம்' என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பண்டைய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவது அறிவுசார் திருட்டைத் தடுக்கும். இந்த பயிற்சி, மத்திய அரசின் சுதேசி மற்றும் ஆத்மநிர்பர் பாரத் என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். டிஜிட்டல் மயமாக்கும் பயிற்சியில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கையெழுத்து பிரதிகள் வாயிலாக பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட பண்டைய அறிவின் பாரம்பரியத்தை இந்தியா இப்போது உலகிற்கு பெருமையுடன் வழங்கி வருகிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. கையெழுத்து பிரதிகளின் தாயகமாக விளங்கும் இந்தியா, இந்த விவகாரத்தில் உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நம் நாட்டின் கையெழுத்துப் பிரதிகள் முழு மனிதகுலத்தின் வளர்ச்சிப் பயணத்தின் தடயங்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.



- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us