Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்

மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்

மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்

மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்

ADDED : ஜூலை 02, 2024 11:05 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மைசூரு : மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், வீட்டுமனைகள் ஒதுக்கியதில், 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது, கர்நாடக அரசியலில் அனலை கிளப்பி உள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கும், நிலம் வழங்கியது அம்பலமாகியுள்ளது. ஆனால், அந்த நிலத்தை தாய் வீட்டு சீதனமாக தன் மச்சான் தந்ததாக, முதல்வர் சமாளித்து உள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல், முறைகேடு புகார்கள் கூறி வருகின்றனர்.

அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாகவும், முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திராவிற்கு அதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ராஜினாமா


இந்நிலையில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த 187 கோடி ரூபாய் முறைகேடு, அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு பிரச்னையில் இருந்து, அரசு மீண்டு வருவதற்குள், மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் நடந்திருப்பதாக கூறப்படும் முறைகேடு, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை குழு


அதாவது, மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் சார்பில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு மனை பெற பயனாளிகள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்கப்படும்.

ஆனால், இந்த வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத், இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.இதையடுத்து, மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தின் கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

முறைகேடு குறித்து விசாரணை நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வெங்கடாசலபதி, பிரபுலிங்க கவுலிகட்டி தலைமையில் விசாரணை குழு அமைத்து, நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கும், மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் நிலம் வழங்கியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கின், 'எக்ஸ்' பதிவு:


வால்மீகி மேம்பாட்டு வளர்ச்சி ஆணையத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில், மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாமல், பணியிட மாற்றம் செய்தது ஏன்? முதல்வர், யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

இந்த பிரமாண்ட முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து என்ன பயன்?முதல்வர் மனைவிக்கு நிலம் கொடுக்க அனுமதி வழங்கியது யார். முதல்வரின் சொந்த ஊரில், முதல்வரின் ஆதரவு அமைச்சரின் துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதில் முதல்வரின் பங்களிப்பு இல்லாமல் இருக்குமா? கோல்மால் சி.எம்., இவர். இவ்வாறு அசோக் பதிவிட்டுள்ளார்.

தாய் வீட்டு சீதனம்


இது குறித்து, முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:


மைசூரு அருகே கேசரே கிராமத்தில் என் மனைவி பார்வதி பெயரில் 3.16 ஏக்கர் நிலம் இருந்தது.திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக, அந்த நிலத்தை என் மச்சான், எனது மனைவிக்கு கொடுத்தார்.மைசூரு நகர வளர்ச்சிக்கு அந்த நிலத்தை எனது மனைவி கொடுத்தார்.

பா.ஜ., ஆட்சியில், அரசின் வளர்ச்சி பணிகளுக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு, 50 சதவீத நிலம், 50 சதவீதத்திற்கு இழப்பீடு தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், என் மனைவிக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருந்தபோது அவருக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம்


துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''சட்டவிரோதமாக நிலத்தை வாங்குவதற்கு, முதல்வரின் மனைவிக்கு என்ன அவசியம் உள்ளது. அவர் கொடுத்த நிலத்திற்கு பதிலாக, மாற்று இடத்தில் நிலம் கிடைத்துள்ளது,'' என்றார்.

ஆனாலும், இந்த விளக்கத்தை ஏற்காத பா.ஜ., தலைவர்கள், நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததில், முதல்வருக்கு தொடர்பு உள்ளது என்று கூறி வருகின்றனர். பெங்களூரில் உள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக, பா.ஜ., எம்.எல்.ஏ., சுனில் குமார் அறிவித்துள்ளார்.

மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் கடந்த 1959ல் லே- அவுட்கள் அமைக்க, 3 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின், அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஆனாலும் கையகப்படுத்திய நிலத்திற்கு, அதிகாரிகள் நிதி ஒதுக்கி முறைகேடு செய்திருப்பதாகவும், பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. இனி வரும் நாட்களில், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us