Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

ADDED : ஜூன் 02, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
'அரை சதவீத ஓட்டு கூட இல்லாத தே.மு.தி.க.,வை எப்படி கூட்டணிக்குள் வைத்திருக்க முடியும்?' என சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., - தி.மு.க., என, இருதரப்பிலும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அலட்சியமாக கருத்து கூறி வந்தனர்.

ஆனால், 2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இரு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன. இதற்காக, சிறிய கட்சிகள் என்றாலும், அவற்றை மரியாதையோடு நடத்துவதற்கு, இருதரப்பிலும் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19ல் நடக்கவிருக்கிறது. அதில், தி.மு.க.,வுக்கு நான்கு; அ.தி.மு.க.,வுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.

2026ல் 'சீட்'


'கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, அ.தி.மு.க., தரப்பு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தொடர்ந்து, அ.தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

'அப்படி எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை' என, அ.தி.மு.க., தரப்பு சொல்லிக் கொண்டிருந்தது. இது, தே.மு.தி.க.,வை அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால், தி.மு.க.,வோடு நெருக்கம் காட்டத் துவங்கினர்.

'வரும் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை தே.மு.தி.க. எடுக்கக்கூடும்' என பதறிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடைசிநேர முயற்சியாக, தே.மு.தி.க., பொருளாளரும், பிரேமலதா தம்பியுமான சுதீஷை அழைத்து பேச்சு நடத்தினார்.

'அடுத்து 2026ல் காலியாகும் இடத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா சீட்டை தே.மு.தி.க.,வுக்கு தருகிறோம்' என்று அ.தி.மு.க., தரப்பில் சொன்னதை, சுதீஷ் ஏற்கவில்லை.

இருந்தபோதும், 'அ.தி.மு.க., தரப்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவர்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

கூடவே, வரும் 2026ல் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., சார்பில் ஒரு சீட் வழங்கப்படும் எனவும்; அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., தொடருகிறது எனவும் அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது, தே.மு.தி.க., தரப்பை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது.

தே.மு.தி.க., மகிழ்ச்சி


இந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பிய தி.மு.க., தரப்பு, மதுரையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் இயற்றி உள்ளனர்.

இது, தே.மு.தி.க., தரப்புக்கு ஆறுதல் ஏற்படுத்தி இருப்பதாக அக்கட்சியினரே கூறுகின்றனர். இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலுக்கு இரு கட்சிகளும் கூட்டணி சேர வாய்ப்புள்ளது எனவும், தே.மு.தி.க., வட்டாரங்களில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


வாக்குறுதி அளித்தவாறு ராஜ்யசபா சீட் ஒதுக்காமல், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க.,வினர், 'வரும் சட்டசபை தேர்தலிலும் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தொடரும்' என, எந்த தைரியத்தில் கூறுகின்றனர் என்று புரியவில்லை.

ஆனால், இன்று வரை எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.,வின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு, தி.மு.க., தன் பொதுக்குழுவில், இரங்கல் தெரிவித்து தீர்மானம் போடுகிறது.

அதனால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணையலாம் என்ற எண்ணம் மொத்த கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதற்கான பேச்சுகள் துவங்கும்.

தி.மு.க.,வுக்கு நன்றி


வரும் 2026ல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வுக்கு வாய்ப்பளிக்கப்படும் என, அ.தி.மு.க., சொன்னாலும், அதை தே.மு.தி.க., ஏற்கவில்லை.

இதையடுத்தே, கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, தன் பேட்டியில் தி.மு.க.,வுக்கு நன்றி தெரிவித்ததோடு, அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா தேர்தல் நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கண்டிப்பாக தருவோம் என்றவர்கள் தரவில்லை


தி.மு.க., பொதுக்குழுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் நன்றி. கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எழுத்துப்பூர்வமாக உறுதிசெய்து கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஒப்பந்தம் செய்தபோது, ஆண்டு குறிப்பிடவில்லை. தற்போது, வரும் 2026ல் ராஜ்யசபா சீட் தருவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. அவர்கள் கடமையை அவர்கள் ஆற்றியதுபோல், தே.மு.தி.க.,வும் தேர்தலை ஒட்டி தன் கடமையை ஆற்றும். வரும் 2026 ஜன., 9ல், கடலுாரில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

- பிரேமலதா,

பொதுச்செயலர், தே.மு.தி.க.,

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us