Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/பழனிசாமி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வியூகம்: தென் மாவட்ட அமைச்சர்களுடன் உதயநிதி ஆலோசனை

பழனிசாமி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வியூகம்: தென் மாவட்ட அமைச்சர்களுடன் உதயநிதி ஆலோசனை

பழனிசாமி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வியூகம்: தென் மாவட்ட அமைச்சர்களுடன் உதயநிதி ஆலோசனை

பழனிசாமி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வியூகம்: தென் மாவட்ட அமைச்சர்களுடன் உதயநிதி ஆலோசனை

ADDED : செப் 12, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
மதுரை:தென் மாவட்டங்களில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் ஆளுங்கட்சி குறித்து பேசிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வியூகம் அமைப்பது குறித்து மதுரையில் அமைச்சர்களுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தற்போது அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள ஓட்டுக்களை குறிவைத்து கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.

இம்மாவட்டங்கள் தி.மு.க.,விற்கு எப்போதும் சவாலாகவும், அ.தி.மு.க.,விற்கு சாதகமாகவும் இருக்கும் என்பது அரசியல் நோக்கர்கள் கணிப்பு.

இம்மாவட்டங்களில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சூறாவளி பிரசாரம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிவிட்டு சென்றுள்ளார். குறிப்பாக, டாஸ்மாக் ஊழல், பத்திரப்பதிவில் ஊழல், ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமைச்சர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., சார்பில் துணைமுதல்வர் உதயநிதி காஞ்சிபுரத்தில் இருந்து மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளார். இம்மாதம் தென்மாவட்டங்களிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டமும் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் நிகழ்ச்சியில் பங்கேற்று, மதுரை விமான நிலையம் திரும்பிய உதயநிதி, அங்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், மூர்த்தி, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட தென் மாவட்ட அமைச்சர்களுடன் தனியே ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் தவிர பிறர் அனுமதிக்கப்படவில்லை. அரை மணிநேரத்திற்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனைக்கு பின் உதயநிதி சென்னை கிளம்பிச் சென்றார்.

உதயநிதி ஆலோசனை குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து சில ஆலோசனைகளை உதயநிதி தெரிவித்துள்ளார். குறிப்பாக நிர்வாகிகள் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றுவதற்கான வியூகம் குறித்து அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் மாவட்டங்களில் சமீபத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் ஆளுங்கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும், மதுரையில் த.வெ.க., நடத்திய 2வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என கலாய்த்ததற்கு அவர் பாணியிலேயே பதிலடி கொடுக்கும் வகையிலும் சுற்றுப்பயணத்திட்டம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றனர்.

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது: இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாளில் முதல்வர் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ. 3 கோடி நிதி ஒதுக்கினோம். அதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் முழு பணிகளும் முடிந்து திறந்து வைக்க இருக்கிறோம். பா.ஜ., கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்து விட்டதாக நீங்கள் கூறினீர்களே என கேட்ட போது, இங்கு அஞ்சலி செலுத்த வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us