Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கட்சியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்; நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை: அன்புமணி

கட்சியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்; நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை: அன்புமணி

கட்சியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்; நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை: அன்புமணி

கட்சியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்; நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை: அன்புமணி

UPDATED : செப் 12, 2025 04:41 PMADDED : செப் 12, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
சென்னை: பா.ம.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக் குழுவில், ராமதாஸ் -- அன்புமணி இடையே மோதல் வெடித்தது. அதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ம் தேதி, தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமித்தார்.

தகுதியற்றவர் அதை தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டி, 'நானே தலைவர்' என தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், பா.ம.க.,விலிருந்து அன்புமணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி:

பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது, பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு, 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு அவரிடம் விளக்கம் கேட்டு, கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இரு முறை அவகாசம் அளித்தும் நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ அன்புமணி எந்த பதிலும் அளிக்கவில்லை.

தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அவர் பதிலளிக்கவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவை; சரியானவை என முடிவு செய்யப்படுகிறது.

பா.ம.க., துவங்கியது முதல், இதுவரை எவரும் செய்யாத, மிக மோசமான, தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, கட்சிக்கு எதிரான செயல்களை அன்புமணி செய்து வருகிறார். தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

குந்தகம் எனவே, பா.ம.க., செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவரது போக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, பா.ம.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனே நீக்கப்படுகிறார்.

பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு, கடந்த 1ம் தேதி அளித்த பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பா.ம.க.,வைச் சேர்ந்தவர்கள், அவருடன் கட்சி சார்பாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதை மீறி தொடர்பு வைத்துக் கொண்டால், அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியிலேயே அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அரசியலில் உள்ள மூத்த தலைவர்கள் பலர், 'தந்தை சொல்லை கேட்டு நடக்க வேண்டும்' என அறிவுரை சொல்லியும் அன்புமணி கேட்கவில்லை.

இன்று முதல் அன்புமணி, என் பெயரின் முதல் எழுத்தை, 'இன்ஷியல்' ஆக போட்டுக் கொள்ளலாம்; அன்புமணி ராமதாஸ் என போட்டுக் கொள்ளக்கூடாது.

பா.ம.க.,வை துவக்கி, 46 ஆண்டுகளாக வளர்த்தவன் நான். கடந்த 2002 முதல், பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கொள்கை பயிற்சியளிக்க பயிலரங்கம் நடத்தி வருகிறேன். இதற்கு, அன்புமணியின் ஆதரவு துளியும் இல்லை. இதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை.

தனி கட்சி ஒரு பயிரை வளர்த்தால் களையும் வரத்தான் செய்யும். களை முளைக்குமே என்பதற்காக, யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த களையை நீக்கி விட்டேன். என்னிடம், 40 முறை பேசியதாக அன்புமணி கூறி வருகிறார்; இது அப்பட்டமான பொய். வெறும் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்.

என் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்து உளவு பார்த்தார். இதை விட மோசமான செயல் இருக்க முடியாது. இனி அன்புமணி தனி கட்சி ஆரம்பிக்கலாம்; தடையில்லை. நான் ஆரம்பித்த பா.ம.க.,வுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. என் பிள்ளையாக இருந்தாலும், அதுவே என் முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

செயல் தலைவர் பதவி யாருக்கு? ''கட்சியின் செயல் தலைவர் பதவி தொடர்ந்து இருக்கும். இனி, அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, நான் முடிவு செய்வேன்,'' என்றார் ராமதாஸ். மாநில நிர்வாக குழு உறுப்பினராக உள்ள மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை செயல் தலைவராக நியமிக்க, ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி கேள்வி வந்ததும், பேட்டியை ராமதாஸ் முடித்துக் கொண்டார்.



'மன்னிக்க தயார்!' ''அன்புமணியை சுற்றி இருப்பவர்கள், நான் வளர்த்த பிள்ளைகள் தான். அவரோடு இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அவர்களும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, தனி கட்சியாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது எனக்கு வருத்தம் இருந்தாலும், திருந்த வாய்ப்புள்ளது என்பதால், அவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன்,'' என்றார் ராமதாஸ்.



உளவு பார்த்திருந்தால் இப்படியொரு சூழல் வந்திருக்காது! பா.ம.க., செய்தி தொடர் பாளர் பாலு அளித்த பேட்டி: பா.ம.க., சட்ட விதிகளின்படி, கட்சியின் நிறுவனருக்கு, நிர்வாகிகளை நீக்குவது, கூட்டங்களை நடத்துவது போன்ற நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம், வழங்கப்படவில்லை. நிர்வாகிகளை நீக்குவது, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டுவது போன்ற எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது. எனவே, அன்புமணியை பா.ம.க.,லிருந்து நீக்கி, ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு, கட்சி விதிகளுக்கு எதிரானது; எவ்விதத்திலும் அன்புமணியை கட்டுப்படுத்தாது. பா.ம.க., தலைவராக அன்புமணியே தொடர்கிறார். கடந்த ஆக., 9ல், மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பா.ம.க., பொதுக்குழு நடந்தது. அதில், 'சட்டசபை தேர்தல் வருவதால், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்தும் சூழல் இல்லை. எனவே, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவிக்காலத்தை, வரும் 2026 ஆகஸ்ட் வரை ஓராண்டு நீட்டித்து' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, ஆகஸ்ட் 10ல் தேர்தல் கமிஷனில் தெரிவித்தோம்; அதை தேர்தல் கமிஷன் ஏற்றது. அதற்கான உத்தரவு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ம.க., தலைவராக அன்புமணி, பொதுச்செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்கின்றனர். எனவே, கட்சி அமைப்பு விதிகளின்படியும், தேர்தல் கமிஷன் சமீபத்தில் வழங்கிய அங்கீகார உத்தரவின்படியும், அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அறிவிப்பு செல்லாது. சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு போன்ற அதிகாரம் அன்புமணியிடமே உள்ளது. உளவு பார்க்கும் பழக்கம் அவரிடம் கிடையாது. அப்படி அவர் உளவு பார்த்திருந்தால், இப்படியொரு சூழல் வந்திருக்காது. இப்போதுள்ள குழப்பமான சூழ்நிலையை அமைதியாக, நிதானமாக கையாண்டு வருகிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதே கருத்தை அன்புமணியும் வலியுறுத்தி உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us