சசிகலா, ஓ.பி.எஸ்., ஆதரவு 'மாஜி'க்கள் திட்டத்தை முறியடித்த இ.பி.எஸ்.,
சசிகலா, ஓ.பி.எஸ்., ஆதரவு 'மாஜி'க்கள் திட்டத்தை முறியடித்த இ.பி.எஸ்.,
சசிகலா, ஓ.பி.எஸ்., ஆதரவு 'மாஜி'க்கள் திட்டத்தை முறியடித்த இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 22, 2024 12:25 AM

சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க போர்க்குரல் கொடுத்த, முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேரின் பிடிவாதத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முறியடித்து உள்ளார்.
'அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். ஆனால், இ.பி.எஸ்., கண்டுகொள்ளவில்லை.
ஒழுங்கு நடவடிக்கை
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வின் தோல்வி குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது. இதில், 23 லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகளிடம், தோல்விக்கான காரணங்கள் குறித்து இ.பி.எஸ்., கேட்டறிந்தார். அப்போதும், நிர்வாகிகள் யாரும் சசிகலா, ஓ.பி.எஸ்., இணைப்பு குறித்து பேசவேயில்லை.
இதையடுத்து ஓ.பி.எஸ்.,, சசிகலாவை இனி எந்த காலத்திலும் சேர்க்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு, தான் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகளை மாவட்ட செயலர்களிடம் தந்து, தொண்டர்களுக்கு வழங்கும்படி கூறியுள்ளார் இ.பி.எஸ்.,. இதன் வாயிலாக, தன் ஒற்றை தலைமைக்கு அவர் வலு சேர்த்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, சசிகலா, ஓ.பி.எஸ்., ஆகியோர், அ.தி.மு.க., வில் இணைவது குறித்து, 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார். இந்த பதில், இ.பி.எஸ்.,ஐ அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதனால், கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்துஉள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து இ.பி.எஸ்., ஆலோசித்தபோது, 'கூட்டணி சரியாக அமையவில்லை' என்றே பெரும்பாலான நிர்வாகிகள் கூறினர். ஓ.பி.எஸ்., சசிகலாவை, கட்சியில் சேர்த்தால் தான், கட்சி வலுப்பெறும்; எதிர்காலத்தில் கட்சி வெற்றி பெறும் என, யாரும் வலியுறுத்தவில்லை.
தொண்டர்கள் தரிசனமாக சசிகலா தென்காசி மாவட்டத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணமும் தோல்வி அடைந்துள்ளது. சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் தென்காசி மாவட்டத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முன்கூட்டியே சென்றனர்.
வாழ்த்து பெறுவார்
அங்கு, சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தோரை சந்தித்து, தொண்டர்கள் தரிசனத்துக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்து வந்தனர். ஆனாலும், சசிகலா சுற்றுப்பயணம் பிசுபிசுத்தது.
'அண்ணாதுரை வெற்றி பெற்றபோது ஈ.வெ.ரா.,விடம் ஆசி பெற்றதை போல, சசிகலா ஒதுங்கிக் கொண்டால், இ.பி.எஸ்., வெற்றி பெற்ற பின், சசிகலாவிடம் வாழ்த்து பெற செல்வார். 'எனவே, அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்க வேண்டும்' என்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறினார். அத்துடன், 'அ.தி.மு.க.,வில் ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு இனி ஒருபோதும் இடம் கிடையாது' என, முன்னாள் அமைச்சர் உதயகுமாரும் கூறினர்.
இவர்கள் இருவரையும் இப்படி பேட்டி அளிக்க வைத்ததன் வாயிலாக, ஓ.பி.எஸ்., சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைக்கும் விவகாரத்திற்கு, இ.பி.எஸ்., முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேரின் யோசனையையும் முறியடித்து விட்டார். இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -