ஒருங்கிணைப்பு குழுவில் நேரு; புகார் கூறிய எம்.எல்.ஏ.,க்கள் 'ஷாக்'
ஒருங்கிணைப்பு குழுவில் நேரு; புகார் கூறிய எம்.எல்.ஏ.,க்கள் 'ஷாக்'
ஒருங்கிணைப்பு குழுவில் நேரு; புகார் கூறிய எம்.எல்.ஏ.,க்கள் 'ஷாக்'
ADDED : ஜூலை 22, 2024 12:29 AM

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபைத் தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் கூட்டணியைச் சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ.,க்கள். இதில் நேருவும், மகேஷும் அமைச்சர்கள்.
முசிறி தியாகராஜன், மண்ணச்சநல்லுார் கதிரவன் தவிர, மற்ற ஐந்து எம்.எல்.ஏ.,க்களும், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களை மதிப்பதில்லை என புகார் கூறி வருகின்றனர்.
புகார் வாசிப்பு
இதில் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, லால்குடி சவுந்தரபாண்டியன், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் ஆகியோர், அமைச்சர்கள் மீதான புகார்களை பகிரங்கமாக கூறுகின்றனர். இதனால், லால்குடி சவுந்தரபாண்டியன், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் மற்றும் துறையூர் ஸ்டாலின் குமார் ஆகியோரை எந்த நிகழ்ச்சிக்கும் அமைச்சர் நேரு அழைப்பதில்லை..
இதையடுத்து நேற்று முன்தினம், சம்பந்தப்பட்ட ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் சென்னையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இதில், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மணப்பாறை அப்துல் சமது, துறையூர் ஸ்டாலின் குமார், லால்குடி சவுந்தரபாண்டியன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் அடங்குவர்.
'திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்களாக இருக்கும் நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் எங்களை சுத்தமாக மதிப்பதில்லை. அதனால், அரசு அதிகாரிகளும் எங்களை மதிப்பதில்லை. 'இதனால், கட்சியினருக்கும்; எங்களுக்கு ஆதரவாக இருப்போருக்கும் சிறு உதவி கூட செய்து கொடுக்க முடியவில்லை. பொதுமக்களும் மதிப்பதில்லை' என கூறி உள்ளனர்.
உடனே, அவர்களை சமாதானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், உங்கள் பிரச்னையை எழுத்துப்பூர்வாக கொடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் மீதான தங்கள் அதிருப்தியை தனித்தனியே ஐவரும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
அதிர்ச்சி
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஊர் திரும்புவதாக, தங்களுடைய ஆதரவாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., சார்பில் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி, எ.வ.வேலுவுடன் கே.என்.நேருவும் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களை இந்த குழுவே தீர்மானிக்கப் போகிறது என அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல் பரவ, முதல்வரிடம் புகார் கூறிய ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.