Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்

கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்

கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்

கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்

Latest Tamil News
சென்னை : 'கூட்டணியை இப்போதே உறுதிப்படுத்தினால் மட்டுமே, பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, ராஜ்யசபா எம்.பி., வழங்க முடியும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நிபந்தனை விதித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 19ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், நான்கு இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ள தி.மு.க., மூன்று வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.

அதிக வெற்றி


ஒரு இடத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியது. மீதமுள்ள இரண்டு இடங்களில், அ.தி.மு.க., வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு இடத்தை தங்களுக்கு வழங்க, அ,தி.மு.க., ஒப்புக்கொண்டதாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். இதை பழனிசாமி மறுத்தாலும், பிரேமலதா இன்னும் நம்பிக்கையுடன் உள்ளார். கடந்த 2019ல், அ.தி.மு.க., ஆதரவுடன், பா.ம.க., தலைவர் அன்புமணி ராஜ்யசபா எம்.பி.,யானார்.

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததால், இப்போது அ.தி.மு.க.,விடம் உரிமையுடன், எம்.பி., பதவி கேட்க முடியாத நிலை உள்ளது. ஆனால், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள இ.பி.எஸ்., இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் எனக் கூறி வருகிறார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., - பா.ம.க., கூட்டணி, 75 இடங்களில் வென்றது. பா.ம.க.,வுக்கு ஓட்டு வங்கி உள்ள இடங்களில், அதிக வெற்றி கிடைத்தது. எனவே, வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, பா.ம.க., கூட்டணி அவசியம் என, பழனிசாமி கருதுகிறார். பா.ஜ.,வின் எண்ணமும் அதுதான். கூட்டணி என்றால் எம்.பி., பதவி வேண்டும் என்பதுதான் பா.ம.க.,வின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஏப்ரல் 11ல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபோதே, பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

பா.ம.க.,வில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அது நடக்காமல் போய்விட்டது. எம்.பி., பதவி உறுதி கொடுக்காததால், தே.மு.தி.க.,வும் வரவில்லை. அமித் ஷா, இ.பி.எஸ்.,சை பொறுத்தவரை, பா.ம.க., இப்போதே கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒன்றாக இணைந்து தி.மு.க., அரசுக்கு எதிராக, போராட்டங்கள் நடத்த வேண்டும் என விரும்புகின்றனர். அதனால், கூட்டணியை உறுதிப்படுத்தினால், அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கலாம் என, இ.பி.எஸ்., நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால், இப்போதே கூட்டணியை முடிவு செய்ய வேண்டாம். தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சூழல்கள் மாறலாம்.

பண்டிகைக்கு பின்


இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் சூழலை மாற்றலாம். எனவே, பொங்கல் பண்டிகைக்கு பிறகு முடிவெடுக்கலாம் என ராமதாஸ் கூறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், செம்மலை, நடிகை விந்தியா, ராஜ்சத்யன் உள்ளிட்ட பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், இ.பி.எஸ்., யாரை எம்.பி.,யாக்க போகிறார், கூட்டணி கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பாரா அல்லது இரண்டு இடங்களையும் சொந்த கட்சிக்கே வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பில், அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us