பார்லிமென்டில் பதிலடி தர தயார் நிலையில் அமைச்சர்கள் நிர்மலா, முருகன்
பார்லிமென்டில் பதிலடி தர தயார் நிலையில் அமைச்சர்கள் நிர்மலா, முருகன்
பார்லிமென்டில் பதிலடி தர தயார் நிலையில் அமைச்சர்கள் நிர்மலா, முருகன்
ADDED : ஜூலை 07, 2024 12:43 AM

லோக்சபாவில் பா.ஜ.,விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை; தோழமை கட்சிகளின் தயவுடன் தான் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த பார்லிமென்டில் இருந்தது போல, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்க மாட்டார்கள். இனி பார்லிமென்ட் கூட்டத்தொடர் கூச்சலும், குழப்பமாகவும் இருக்கும் என்பதை, நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் உணர்த்தி விட்டது.
சபையில் தி.மு.க.,வின் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் என்பது எம்.பி.,க்களின் பேச்சிலிருந்தே தெரிந்து விட்டது. இந்நிலையில், எதையும் சமாளிக்க பா.ஜ.,வில் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்த வி.சி., கட்சி தலைவர் தொல் திருமாவளவன், 'நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, லோக்சபாவில் பேசினார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'லோக்சபாவுக்கு வந்து மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். ஏனெனில் போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது...' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் கூச்சலிட்டனர். ஆனால், பா.ஜ., சீனியர் தலைவர்கள், 'சரியான பதிலடி...' என, நிர்மலாவை பாராட்டினர்.
'இனி பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் எது குறித்து பேசினாலும், அதற்கு தக்க பதிலடி தர, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இணை அமைச்சர் எல்.முருகனும் தயாராக இருக்க வேண்டும்' என, கட்சி தலைமை சொல்லியிருக்கிறதாம்.
அதற்காகவே, 'தமிழகத்தில் என்ன நடக்கிறது; அங்கு நிலவும் பிரச்னைகள் என்னென்ன?' என்பது குறித்த அனைத்தையும் இந்த இரு அமைச்சர்களும் கண்காணித்து வருகின்றனர்.