UPDATED : ஜூலை 07, 2024 03:25 AM
ADDED : ஜூலை 07, 2024 12:36 AM

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சென்னை அடுத்த, முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், படகு குழாம் நடத்தப்படுகிறது. பகிங்ஹாம் கால்வாய் - வங்க கடல் முகத்துவார நீர்பரப்பில் படகு சவாரி நடக்கிறது.
தற்போது பயணியர் அதிகரிக்கும் சூழலில், அவர்களை கவரும் வகையில், தனியார் நிறுவன பங்களிப்புடன் இங்கு, மிதவை உணவகம் அமைக்க, நிர்வாகம் முடிவெடுத்தது.
இத்திட்டத்தை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இந்த இப்படகு மிதவை உணவகம், 125 அடி நீளம், 25 அடி அகலம் அளவில், இரண்டு தளங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
கீழ்தளத்தில் பிரதான உணவகம், குளிர்சாதன வசதியுடன் 100 பேர், அமர்ந்து உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேல்தள திறந்தவெளி பகுதியில், 50 பேர் நின்றவாறு, இயற்கை அழகை ரசித்து உணவருந்தலாம். இந்த மிதவை உணவக பணி முடிந்து திறப்புக்கு தயாரான நிலையில், சில காரணங்களால் தாமதமாகிறது.
- நமது நிருபர் --