மீனாட்சி அம்மனின் செங்கோலை லோக்சபாவில் அவமதிப்பதா?: மதுரை எம்.பி.,க்கு பொதுமக்கள், பா.ஜ., கண்டனம்
மீனாட்சி அம்மனின் செங்கோலை லோக்சபாவில் அவமதிப்பதா?: மதுரை எம்.பி.,க்கு பொதுமக்கள், பா.ஜ., கண்டனம்
மீனாட்சி அம்மனின் செங்கோலை லோக்சபாவில் அவமதிப்பதா?: மதுரை எம்.பி.,க்கு பொதுமக்கள், பா.ஜ., கண்டனம்
UPDATED : ஜூலை 03, 2024 09:57 AM
ADDED : ஜூலை 02, 2024 11:17 PM

மதுரை : லோக்சபாவில் நேற்று முன்தினம் முதன்முதலாக பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், 'செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்தில் எத்தனை நுாறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா. அந்தச் செங்கோலை இந்த அவையில் வைத்திருப்பதன் மூலம், இந்த நாட்டு பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று ஆவேசமாக பேசினார்.
அவரது இந்தப் பேச்சு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பெருமை மிக்க மதுரை மண்ணின் எம்.பி., அந்த மன்னர்களையே அவமதிப்பதா என மதுரை மக்களும் கொதித்து போயுள்ளனர்.
பா.ஜ., விவசாய பிரிவின் மாநில துணைத் தலைவர் சசிராமன் கூறியதாவது: தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமையை, ஆட்சியின் மாண்பை, பாதுகாக்கும், பறைசாற்றும் விதமாக மன்னர்கள் கையில் வைத்திருந்த செங்கோலை பார்லிமென்டில் அவமதித்து பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.
சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தவறாக தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் தன் உயிரைக் கொடுத்து தன் செங்கோலை நிமிர்த்தினான். தமிழக மாநகராட்சிகளில் ஆட்சிப் பொறுப்பேற்கும் மேயர்களுக்கு பொறுப்பேற்றதற்கு சாட்சியாக செங்கோலை அளிக்கின்றனர். இம்மரபுகளை கட்டிக்காக்கும் தமிழகத்தில், இப்படி பொறுப்பற்ற வகையில் பேசிய எம்.பி., தமிழகத்திற்கே அவமானம்.
மதுரையை ஆளும் மீனாட்சி செங்கோல் தரிக்கும் நாளில் லட்சோப லட்சம் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து, தங்கள் வீட்டிலும் இதுபோல நடக்க வேண்டும் என வேண்டுவர். ஆன்மிக பூமியான மதுரை மண்ணின் எம்.பி., மதுரை மீனாட்சியின் செங்கோலையே அவமதித்தது போல பேசியிருக்கிறார். இதன் மூலம் ஓட்டளித்த மதுரை மக்களை அவமதித்துள்ளார்.
மன்னர்கள், தமிழர்கள், பக்தர்கள் மனம் புண்படும்படி பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.