அதிருப்தியில் மாஜி அமைச்சர் பொன்முடி; சீனியர்கள் மூலம் சமாதான முயற்சியா?
அதிருப்தியில் மாஜி அமைச்சர் பொன்முடி; சீனியர்கள் மூலம் சமாதான முயற்சியா?
அதிருப்தியில் மாஜி அமைச்சர் பொன்முடி; சீனியர்கள் மூலம் சமாதான முயற்சியா?
ADDED : மே 27, 2025 12:51 AM

தி.மு.க., மாநில பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள மாஜி அமைச்சர் பொன்முடியை சீனியர் அமைச்சர்கள் சந்தித்து, சமாதானப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், விழுப்புரம் மாவட்ட செயலராக இருந்த ஏ.ஜி.சம்பத், டி.ஜி.வெங்கட்ராமன், கு.ப.பழனியப்பன், வெங்கடபதி போன்ற ஆளுமைகளை ஓரங்கட்டி, தனது அரசியல் சாதுார்யத்தால், கல்லுாரி பேராசிரியராக இருந்த பொன்முடி, விழுப்புரம் தி.மு.க., மாவட்ட செயலராகவும், அமைச்சராகவும் வலம் வந்தார்.
திராவிடர் கழகத்திலிருந்து வந்த அவர், தனது அரசியல் சாணக்கியத்தால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, போட்டியாளர்களை வளர விடாமல் சமாளித்து, ஒருங்கிணைந்த மாவட்ட செயலராகவும், மாநில துணை பொதுச்செயலராகவும் உயர்ந்தார்.
தற்போது, தனது தொடர் சர்ச்சை பேச்சாலும், முறைகேடு வழக்கு நெருக்கடியாலும், எதிர்பாராத சறுக்கள்களை சந்தித்து வருகிறார். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கிய நபராக இருந்தபோதும், துணை பொதுச்செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு அதிர்ச்சியை சந்தித்துள்ளார்.
தொடக்கத்தில், அவரது பவர் புல்லான மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, ஆறுதலாக மாநில பதவி வழங்கப்பட்டது. பிறகு, போராடி தனது மகன் கவுதமசிகாமணிக்கு, விழுப்புரத்தை மையமாக கொண்ட தெற்கு மாவட்ட செயலர் பதவியை வாங்கினார். சமீபத்தில் அந்த பதவியும் பிரிக்கப்பட்டு, மத்திய மாவட்ட செயலர் பதவி லட்சுமணன் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக மாநில பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டதால், பொன்முடி அதிர்ச்சியடைந்தார்.
தி.மு.க., தலைமையின், எதிர்பாராத இந்த நடவடிக்கையால், வேதனையடைந்த பொன்முடி, சென்னையில் முகாமிட்டு, முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து, மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியதோடு, உள்ளூரில் பிறருக்கு அமைச்சர் பதவி வழங்கி, தன்னை மேலும் அவமதிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பன்னீர்செல்வம், விழுப்புரம் கூட்டத்திற்கு வந்தபோது, பொன்முடியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த முதல் நாள் (தெற்கு மாவட்ட) நிர்வாகிகள் கூட்டத்தில் பொன்முடியின் படங்களும், பெயர்களும் முன்னிலை படுத்தி பேனர்கள் இருந்த நிலையில், மறு நாள் நடந்த மத்திய மாவட்ட கூட்டத்தில் பொன்முடியின் பெயர் முற்றிலும் இடம் பெறவில்லை. இது தொடர்பாக சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே கோஷ்டி பிரச்னையும், புறக்கணிப்பும் கூடாது என, பன்னீர்செல்வம் சமாதானப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, மூத்த அமைச்சர் நேரு, நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பொன்முடியை அவரது வீட்டில் சந்தித்து பேசி சென்றார். பொன்முடி ஓரங்கட்டப்பட்டு அதிருப்தியில் உள்ளதால், மாவட்டத்தில் கோஷ்டி பிரச்னைகள் ஏற்பட்டு, கட்சி தேர்தல் நேரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என கருதும் தி.மு.க., தலைமை, அவரை சமாதான படுத்தும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் மூலம் பேசியுள்ளதாம். விரைவில் மதுரையில் நடக்க உள்ள தி.மு.க., கூட்டத்தில், பொன்முடிக்கு மாநில பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.