கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிக்கு புதுச்சேரி 'லிங்க்' கிடைத்தது எப்படி?
கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிக்கு புதுச்சேரி 'லிங்க்' கிடைத்தது எப்படி?
கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிக்கு புதுச்சேரி 'லிங்க்' கிடைத்தது எப்படி?
ADDED : ஜூன் 22, 2024 05:59 AM

கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிக்கு மெத்தனால் கிடைத்தது எப்படி என்பது குறித்து இரு மாநில போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் தெரிய வந்துள்ள பகீர் பின்னணி: புதுச்சேரி அடுத்த மடுகரையை குட்கா வியாபாரி ஒருவர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி கடலுார் சிறையில் இருந்தபோது, அங்கு அறிமுகமான சங்கராபுரத்தை சேர்ந்த நபர் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கேட்டுள்ளார். அதற்கு மடுகரை ஆசாமி தனக்கு சாராயம் பற்றி தெரியாது. ஆனால் தனக்கு தெரிந்த விழுப்புரத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு அதுபற்றி தெரியும் என அவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
அதன் பிறகு, சங்கராபுரம் ஆசாமியை தொடர்பு கொண்டு மாதேஷ், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்த ஆன்லைன் மூலம் மெத்தில் டெர்மைட் ஆயில் 10 கேன்கள் ஆர்டர் செய்துள்ளார். இந்த கேன்கள் விருத்தாசலத்தில் உள்ள ஒரு செராமிக்ஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளது. அங்கிருந்து கெமிக்கல் கேன்களை தனது வீட்டில் பதுக்கி வைத்து விட்டு, அதில் இரண்டை மட்டும், சங்காபுரத்தை சேர்ந்த நபருக்கு விற்றுள்ளார்.
அவர், சேஷாமுத்திரத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி சின்னத்துரை, 45; மூலம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சேர்ந்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜிடம் விற்றுள்ளார். இந்த மெத்தனால்தான் 50 பேரின் உயிரை குடிக்க காரணமாக இருந்துள்ளது. இந்த முழு சம்பவம் தொடர்பாக புதுச்சேரி போலீசார், மத்திய உள்துறைக்கும், தமிழக போலீசாருக்கு அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
-நமது நிருபர்-