முருகன் மாநாட்டால் எங்களுக்கே லாபம் என்கிறது தி.மு.க.,
முருகன் மாநாட்டால் எங்களுக்கே லாபம் என்கிறது தி.மு.க.,
முருகன் மாநாட்டால் எங்களுக்கே லாபம் என்கிறது தி.மு.க.,
ADDED : ஜூன் 25, 2025 01:59 AM

சென்னை : “நாங்கள் 100 மாநாடுகள் நடத்தி, தி.மு.க.,வுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டுகளை, ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து கொடுத்துள்ளனர்,” என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை அறிவாலயத்தில், அவர்கள் அளித்த பேட்டி:
சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதனால், வடமொழிக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தால் தான், கருணாநிதி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கினார்.
சமஸ்கிருத மொழிக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை, மற்ற மொழிகள் உட்பட தமிழ் மொழியும் பெற முடியாமல் போனதால் தான், அனைத்து மாநிலங்களும் ஓரணியில் திரள வேண்டும் என்கிறோம்.
முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை ஆகியோரை அவமதித்ததால், தமிழகமே கொதித்துப்போய் இருக்கிறது. அவர்களை பழித்தவர்கள் யாரும், தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை.
அரசு நடவடிக்கை எடுக்குமா என மக்களே எதிர்பார்க்கும்போது, இதை பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் இதை புறக்கணித்து விட்டனர். நாங்கள் 100 மாநாடு நடத்தி, தி.மு.க.,வுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை, ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.