Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 04, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
சென்னை : சம்பளம் வழங்காமல் பல்கலை ஆசிரியர்களின் வயிற்றில், தி.மு.க., அரசு அடிப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., ஆட்சியில், உயர்கல்வித் துறையின் நிர்வாக திறமையின்மையால் பல்கலைகளும், அரசு கல்லுாரிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. பல பல்கலைகளில் துணைவேந்தர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

பேராசிரியர்களுக்கு ஊதியமின்மை, பணி நிரந்தரமின்மை, நிதிப் பற்றாக்குறை, முறைகேடுகள், மாணவர் சேர்க்கை குறைவு போன்ற முக்கிய பிரச்னைகளால், தமிழக உயர்கல்வித் துறை சீரழிந்துள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தேவையற்ற வழக்குகளுக்கு, உச்ச நீதிமன்றம் சென்று, இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் தி.மு.க., அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்குகளை ஏன் முடிக்கவில்லை என்று, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நிதிப் பற்றாக்குறையால் மதுரை காமராஜர் பல்கலையில், 2 ஆண்டுகளாக சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலை, அண்ணாமலை பல்கலையில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள், ஊதியப் பிரச்னைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு, கடந்த மாதச் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. பாரதிதாசன், பாரதியார் பல்கலைகளில் முனைவர் பட்டம் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாக, ஆய்வாளர்கள் புகார் அளித்துள்ளனர். 160 அரசு கல்லுாரிகளில், 8000க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாணவர்களுக்கு அழியாத கல்விச் செல்வத்தை கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் எனும் ஆசான்கள். அந்த தெய்வங்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில், தி.மு.க., அரசு இறங்கியுள்ளது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல். தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியர்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

புல் அவுட்:

நம்பத் தயாராக இல்லை!தமிழக பல்கலைகளில் நிர்வாகப் பிரச்னைகளால், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் பல பாடப்பிரிவுகளையே, தி.மு.க., அரசு மூடிக்கொண்டிருக்கிறது. நான்காண்டுகளாக துாங்கிவிட்டு, இப்போது புதிய பல்கலை, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை, தமிழக மக்களும், மாணவர் சமுதாயமும் நம்பத் தயாராக இல்லை. உயர்கல்வி நிலை இப்படி இருக்கும்போது, 'நான் முதல்வன், தமிழ் புதல்வன்' என்று வெற்று விளம்பரம் செய்வதால் மட்டும், மாணவர்களின் கல்வி மேம்படாது.பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,







      Our Apps Available On




      Dinamalar

      Follow us