தே.மு.தி.க.,வுக்கு காங்கிரஸ் அழைப்பு; 85 தொகுதி வெற்றிக்கு தி.மு.க., திட்டம்
தே.மு.தி.க.,வுக்கு காங்கிரஸ் அழைப்பு; 85 தொகுதி வெற்றிக்கு தி.மு.க., திட்டம்
தே.மு.தி.க.,வுக்கு காங்கிரஸ் அழைப்பு; 85 தொகுதி வெற்றிக்கு தி.மு.க., திட்டம்

தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு, தே.மு.தி.க.,வுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று திடீர் அழைப்பு விடுத்துள்ளார். அதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற்றது. அப்போது செய்த ஒப்பந்தப்படி, ராஜ்யசபாஎம்.பி., 'சீட்' தரப்படாததால், தற்போது தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கோபத்தில் உள்ளார். அடுத்த ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு தருவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சமரசம் செய்துள்ளார்.
இந்நிலையில், மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு புகழாரம் சூட்டி, பிரேமலதா அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, தி.மு.க., கூட்டணியில் அக்கட்சியை சேர்க்க, மூத்த அமைச்சர் ஒருவர் பேச்சு நடத்தியுள்ளார். அதன் காரணமாகத்தான், அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்கவில்லை என்பதை சூசகமாக சொல்லும் வகையில், '2026 சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது குறித்து, அடுத்தாண்டு அறிவிக்கப்படும்' என, பிரேமலதா கூறியிருக்கிறார்.
இந்நிலையில், 'தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா; கூட்டணிக்கு பிரேமலதா வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா' என, செல்வப்பெருந்தகையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''இண்டி கூட்டணியின் தமிழகத்தின் தலைவர் ஸ்டாலின்தான். அதனால், கூட்டணி குறித்து அவர்தான் முடிவு செய்வார். தே.மு.தி.க.,வை வரவேற்க, நாங்கள் காத்திருக்கிறோம்,'' என்றார்.
இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:
துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில், தி.மு.க., பலவீனமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க.,வுக்கு அதிருப்தி உருவாகி உள்ளது. விருதுநகர், தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலும், தி.மு.க.,வுக்கு எதிரான அலை வீசுகிறது.
எனவே, தென்மாவட்டங்களில், தி.மு.க., கூட்டணியை பலப்படுத்த வேண்டுமானால், தே.மு.தி.க., ஆதரவு தேவை என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் முழுதும் தே.மு.தி.க.,வுக்கு, 2.6 சதவீதம் ஓட்டுகள் உள்ளன. குறைந்தபட்சம் 85 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு, தே.மு.தி.க., ஓட்டுகள் கை கொடுக்கும் என, உளவுத்துறையும் கூறியுள்ளது.
அதன் அடிப்படையில், இதற்கான பேச்சு துவங்கியுள்ளது. தி.மு.க., அறிவுறுத்தலின்படியே, தே.மு.தி.க.,வை வரவேற்கக் காத்திருப்பதாக, செல்வப்பெருந்தகை வெளிப்படையாக நேற்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -