Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்

UPDATED : ஜூலை 19, 2024 01:10 PMADDED : ஜூலை 19, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதி வலைகள் குறித்து விசாரித்து வரும் தனிப்படை போலீசார், அதில் முக்கிய பங்கு வகித்த ரவுடியின் நெருங்கிய தோழி மற்றும் மற்றொரு ரவுடியை தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசார் கூறியதாவது:


பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்வதற்கு முன், ரவுடிகள் கவுரிசங்கர், குப்புசாமி, விஜி, கிச்சா, கீனோஸ் ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் வலம் வருவார். கூட இருப்பவர்கள் கொண்டு வந்து சேர்த்த சில பிரச்னைகளில் நேரடியாக தலையிட்டார். ஒரு கட்டத்தில் தொழில் போட்டி காரணமாக, அவருக்கும், தற்போது வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கும் நேரடி பகை ஏற்பட்டது. இதனால், நாகேந்திரனின் எதிரியான பாம் சரவணன் கோஷ்டியில், ஆம்ஸ்ட்ராங் ஐக்கியமானார்.

பாம் சரவணன் தம்பி தென்னரசுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியில் மாவட்டச்செயலர் பொறுப்பு வழங்கி, பாதுகாப்பு அரணாக இருந்தார். இது தென்னரசின் எதிரி ஆற்காடு சுரேஷுக்கு பிடிக்கவில்லை. அவர், கட்டப்பஞ்சாயத்துகளில் ஆம்ஸ்ட்ராங்குடன் மோதி வந்தார்.

இதற்கிடையே, 2015ல், ஆம்ஸ்ட்ராங் வலது கரம் தென்னரசை, ஆற்காடு சுரேஷ் கொன்றார். இதற்கு கட்டாயம் பழி வாங்க வேண்டும் என, பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் சபதம் எடுத்தனர்.

கடந்த 2017ல், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்னைக்குரிய, 100 ஏக்கர் நிலம் விற்பனை விவகாரத்தில், இருவரும் தலையிட்டனர். இதில், ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றார். இது ஆற்காடு சுரேஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அதற்கு ஏற்ப, கடந்தாண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம், மாமூல் கேட்டு ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் மிரட்டி உள்ளார். அந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆம்ஸ்ட்ராங், அஸ்வத்தாமனை மிரட்டி உள்ளார். இது சிறையில் இருக்கும் நாகேந்திரனுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்கும் பொறுப்பு, ஆற்காடு சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்து, ஆம்ஸ்ட்ராங் உயிரை காப்பாற்ற, பாம் சரவணன் கூட்டாளிகள் ஒற்றை கண் ஜெயபால் உட்பட பலர், கடந்தாண்டு ஆக., 18ல், சென்னையில் ஆற்காடு சுரேஷை கொன்றனர்.

சதி வலை


ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் தான் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றாலும், இதற்காக பின்னப்பட்ட சதி வலையில், மேலும் சில ரவுடிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் உள்ளனர்.

அண்ணன் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு முக்கியகாரணமாக இருந்த ஆம்ஸ்ட்ராங் கதையை முடித்தே தீர வேண்டும் என, தம்பி பொன்னை பாலு, 39, துடித்தார். அது பற்றி, தன் மைத்துனரும், வழக்கறிஞருமான, தி.மு.க.,வைச் சேர்ந்த, திருநின்றவூர் அருளிடம் தெரிவித்தார்.

அவருக்கும், 2001ல், மயிலை சிவக்குமார் என்ற ரவுடியால் கொல்லப்பட்ட, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி மலர்க்கொடிக்கும் பழக்கம் உண்டு. மலர்க்கொடி சட்டம் படித்தவர்.

அ.தி.மு.க.,வில், திருவல்லிக்கேணி பகுதி இணை செயலராக இருந்தார். அவரின் உதவியை நாடினார். ஏற்கனவே, தன் கணவர் தோட்டம் சேகரை கொன்ற மயிலை சிவக்குமாருக்கு ஆதரவாக இருந்ததால், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் மலர்க்கொடிக்குமே பகை உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் மீதான தன்னுடைய ஆத்திரத்தை அருள் கூறியதும், சந்தர்ப்பத்தை மலர்க்கொடி பயன்படுத்திக் கொண்டார். கூலிப்படையினரை ஏற்பாடு செய்யும் பொறுப்பை, தன் வலது கரமாக செயல்பட்டு வந்த, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும் த.மா.கா., மாநில மாணவர் அணி துணை தலைவருமான ஹரிஹரன் என்பவரிடம் ஒப்படைத்தார்.

அருள், ஹரிஹரன், பொன்னை பாலு ஆகியோர், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பா.ஜ., வட சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவி அஞ்சலை, 48, என்பவரை ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டத்துடன் சந்தித்தனர்.

யார் இந்த அஞ்சலை?


கடந்த, 2001ல் அஞ்சலை, புளியந்தோப்பு காவல் நிலையத்தில், 'பி' பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தார். கணவரை பிரிந்த அவர், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி சின்னகேசவலு என்ற சின்னாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்தார்.

கடந்த, 2010ல், சின்னாவின் நிழல் போல இருந்த ஆற்காடு சுரேஷுக்கும், அஞ்சலைக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அஞ்சலையுடன் வாழ்வதில் ரவுடிகளுக்கிடையே மோதல் வெடித்தது; பகை மூண்டது.

சின்னாவை விட்டுப் பிரிந்த அஞ்சலையுடன், ஆற்காடு சுரேஷ் தனிக்குடித்தனம் நடத்தினார். இது ரவுடிகள் வட்டாரத்தில், சின்னாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. நான் தான் பெரிய ரவுடி என, கெத்து காட்டி வந்த அவரின் உயிர் போக, அஞ்சலையே காரணமாக இருந்தார்.

ரவுடிகளுக்கான மோதலில், பூந்தமல்லி நீதிமன்றம் அருகே, கூட்டாளிகளுடன் சேர்ந்து, சின்னா மற்றும் அவரது வழக்கறிஞர் பகத்சிங் ஆகியோரை, ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொன்றார்.

இதற்கிடையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என்பதால், அஞ்சலைக்கும் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நடவடிக்கையை கண்காணிக்க, கூலிப்படையினருக்கு அஞ்சலை, 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

கடந்த மே மாதம் தான், அவர் கந்துவட்டி வசூலித்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தார். அஞ்சலை, மலர்க்கொடி, அருள், பொன்னை பாலு ஆகியோர் இணைந்த கோஷ்டிக்கு, சிறையில் இருந்து தான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கூலிப்படையினருக்கு மலர்க்கொடி வாயிலாக, 50 லட்சம் ரூபாய் கைமாறி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை கும்பலுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, வட சென்னையைச் சேர்ந்த முக்கியமான ரவுடியான 'சம்போ' செந்திலிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை தேடி வருகிறோம்.

மேலும் மூவரிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக மூன்று கார்களும் ஐந்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீக்கம்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மலர்க்கொடி, அஞ்சலை மற்றும் ஹரிஹரன் ஆகியோரை அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளில் இருந்து நீக்கி, அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us