அண்ணாமலைக்கு எதிரான காங்., போராட்டம் பிசுபிசுப்பு
அண்ணாமலைக்கு எதிரான காங்., போராட்டம் பிசுபிசுப்பு
அண்ணாமலைக்கு எதிரான காங்., போராட்டம் பிசுபிசுப்பு
ADDED : ஜூலை 11, 2024 04:24 AM

தமிழக காங்கிரஸ் தலைவரை, 'ரவுடி' என, விமர்சித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை நேற்று, 4 மாவட்ட காங்., தலைவர்கள் மட்டும் எரித்ததால், ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்துள்ளது.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை, ரவுடி என, விமர்சித்தார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. 'நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரம் காட்ட வேண்டும்; அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வேன்' என, செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.
இதற்கு அண்ணாமலை, செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளைப் பட்டியலிட்டு, 'மன்னிப்பு கேட்க மாட்டேன்; இந்த விவகாரத்தில் பின்வாங்கவும் மாட்டேன்' என, பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் தலைமையில், அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது உருவப்படத்தை காங்கிரசார் எரித்தனர்.
பின், சிவராஜசேகரன் கூறியதாவது: செல்வப்பெருந்தகை மீது தற்போது, எந்த குற்ற வழக்கும் இல்லை. ஆனால், அண்ணாமலை தவறான குற்றச்சாட்டுகளை கூறி அவதுாறு பரப்புகிறார். அது நீதிமன்ற அவமதிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில், அண்ணாமலைக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற மாவட்டங்களில் போராட்டம் நடக்கவில்லை. இதனால், தமிழக காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இன்று மாநிலம் முழுதும் பல்வேறு போராட்டங்களை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காங்., மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், காணொலி வாயிலாக நேற்று நடந்தது. அதில், மாநில நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால், பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்' என்றார்.
- நமது நிருபர் -