இரு புதிய மேயர்கள் தேர்வு; ஜாதி பின்னணியால் குழப்பம்
இரு புதிய மேயர்கள் தேர்வு; ஜாதி பின்னணியால் குழப்பம்
இரு புதிய மேயர்கள் தேர்வு; ஜாதி பின்னணியால் குழப்பம்
ADDED : ஜூலை 11, 2024 04:30 AM

கோவை மற்றும் நெல்லைக்கான புதிய மேயர்கள் யார் என்ற தேர்வுக்கு பின்னணியில், கவுன்சிலர்களின் ஜாதி அலசப்படுகிறது. அறிவிப்பு தாமதமாகி வருவதற்கு, இதுவே காரணம் என்கின்றனர் மாநகர தி.மு.க.,வினர்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கல்பனா, தன் உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களைக் கூறி, பதவியை ராஜினாமா செய்தார். அவரது விலகல் மாமன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தில் இருந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு, 'கோவை மாநகராட்சி மேயர் பதவி (பெண்களுக்கான ஒதுக்கீடு) காலியாக இருக்கிறது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தோர் கூறியதாவது:
மாநிலம் முழுதும் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த பதவி காலியாக இருக்கிறதென, ஒவ்வொரு மாதமும், 11ம் தேதி, தேர்தல் ஆணையத்தில் இருந்து அரசுக்கு தெரியப்படுத்தப்படும். கோவை மேயர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக, 11ம் தேதி அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.
பின், மறைமுக தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார். புதிய மேயரை தேர்வு செய்வதற்கு முன், மாமன்ற கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், துணை மேயர் தலைமையில் நடத்தலாம்.
அவர், ரெகுலர் மேயர் போல செயல்பட முடியாது; மேயருக்கான இருக்கையிலும் அமர முடியாது; மேயர் அங்கி அணியக்கூடாது. துணை மேயருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமெனில், சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்; அதற்கான சாத்தியக்கூறுகள் எழவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
புதிய மேயரை தேர்ந்தெடுக்க, ஜாதி பின்புலம் முழுமையாக அலசப்படுகிறது. இதனால், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. கோவையில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியைத் தவிர்த்த இதர ஜாதியினரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென தி.மு.க., தலைமை விரும்புவதால், தற்போதுள்ள தி.மு.க., கவுன்சிலர்களின் பின்புலம் குறித்து, உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மாநகராட்சி பகுதியில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த 1.5 லட்சம் மக்கள் வசிப்பதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இச்சூழலில், குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அதிகமாக ஓட்டு அளித்திருக்கின்றனர். அவர்களை புறக்கணித்தால், 2026 சட்டசபை தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், அவ்விரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறி, கட்சி தலைமையை கட்சியினர் குழப்பியுள்ளனர். இதை நிலைதான், நெல்லையிலும் இருக்கிறது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.