முடியாதவர்கள் ஓய்வு பெறுங்கள் மா.செ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு
முடியாதவர்கள் ஓய்வு பெறுங்கள் மா.செ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு
முடியாதவர்கள் ஓய்வு பெறுங்கள் மா.செ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : ஜூன் 30, 2025 02:20 AM

'ஒரு பூத் கமிட்டியில், 30 சதவீதம் உறுப்பினர்கள் சேர்க்கையை, வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியாத மாவட்டச் செயலர்கள், தங்கள் பதவியில் இருந்து விலகி, விருப்ப ஓய்வில் செல்லுங்கள்' என, முதல்வர் ஸ்டாலின் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., மாவட்டச் செயலர்கள், சட்டசபை தொகுதி பார்வையார்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து, கட்சியினர் கூறியதாவது:
'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தில் இணைந்தவர்களில், விருப்பம் உள்ளவர்கள், தி.மு.க.,வில் உறுப்பினர்களாகவும், இணைவர். ஜாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும், நாம் சென்றடைய வேண்டும். தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
ஜூலை 1ல் துவங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழகம் முன்னெடுப்பு நடக்கும்.
கட்சியின் ஐ.டி., அணி சார்பில் தொகுதிக்கு ஒருவர் என, 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழியாக, 68,000 ஓட்டுச்சாவடிகளில் உள்ள, பூத் டிஜிட்டல் ஏஜன்ட்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். இதற்கான உதவிகளை, மாவட்டச் செயலர்கள் செய்து தர வேண்டும்.
தமிழகம் முழுதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜன்ட், ஒரு பெண், ஒரு இளைஞர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். இது கட்டாயம். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. இவர்களுடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொள்ள வேண்டும். ஆக.,15ம் தேதிக்கு பின் நிறைவு விழாக்களை நடத்த வேண்டும். இந்த திட்டங்களை செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும், மாவட்டச் செயலர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கு உண்டு.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ளவர்களை சந்தித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் இல்லங்களுக்கு நேரில் சென்று பேச வேண்டும்.
பூத் கமிட்டிகளில், 30 சதவீதம் பேரை, உறுப்பினர்களாக சேர்க்கும் திட்டத்தை, நிறைவேற்ற முடியாத மாவட்டச் செயலர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார் என, கட்சியினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -