தமிழகத்தை ஆட்சி செய்வது 'தம்பி'களா? சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தை ஆட்சி செய்வது 'தம்பி'களா? சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தை ஆட்சி செய்வது 'தம்பி'களா? சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முருகன் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 02:23 AM

கோவை : ''தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது முதல்வரா அல்லது 'தம்பி'களா என, பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இன்று ஆட்சியை நடத்துவது முதல்வரா அல்லது தம்பிகளா என, பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது. இத்தம்பிகள் யார், இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்?
சுரண்டல்
அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் வகையில் வலம் வருகின்றனர். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.
தி.மு.க.,வின் முக்கிய குடும்பத்துக்கு வேண்டப்பட்ட தம்பிகள் தமிழகத்தை சுரண்டுகின்றனர். இந்த தம்பிகளுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் என்ன உறவு? அவர்களை இயக்குவது யார் என்பதை, தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அரக்கோணத்தில் உள்ள அபலை பெண் ஒருவர், தி.மு.க., நிர்வாகி ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளார். கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் அந்த வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணை, தி.மு.க.,வைச் சேர்ந்த சில 'சார்'களுக்கு, விருந்தாக்க முயன்றதாகவும் அபலைப் பெண் குற்றஞ்சாட்டி உள்ளார். அப்பெண் குறிப்பிடும் அந்த 'சார்'கள் யார் என்பதும் தெரிந்தாக வேண்டும். தமிழகத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஏராளமான சார்கள் பெண்களை சீரழித்து வருகின்றனர். இன்று சார்கள் மற்றும் தம்பிகளின் ஆட்சி நடக்கிறது.
இதனால், வெட்கப்பட வேண்டிய ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக டில்லி பக்கமே செல்லாத முதல்வர் ஸ்டாலின், கடைசி நேரத்தில் அரசியலுக்காக சென்றுள்ளதாக மக்களே விமர்சிக்கின்றனர்.
ஸ்டன்ட்
பிரதமருடனான சந்திப்பு என்பது, அரசியல் ஸ்டன்ட். எங்களுக்கு யாரையும் மிரட்ட, அடிபணிய வைக்க வேண்டிய அவசியமில்லை.
தி.மு.க., அரசின் செயல்திறனற்ற தன்மையால், சரியான முதலீடுகளை பெற தவறியுள்ளனர். தமிழகத்திற்கு தொழில் துவங்க வேண்டிய பல நிறுவனங்கள் வராததோடு, இருக்கும் நிறுவனங்களும் வேறு மாநிலம் நோக்கி செல்கின்றன.
இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாய், வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்த கூட்டணி, தி.மு.க., என்ற அரக்கனை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.