வியட்நாமுக்கு விமானம் இயக்க ஒப்பந்தம்: சென்னை நீக்கம்; பெங்களூரு, ஹைதராபாத் சேர்ப்பு
வியட்நாமுக்கு விமானம் இயக்க ஒப்பந்தம்: சென்னை நீக்கம்; பெங்களூரு, ஹைதராபாத் சேர்ப்பு
வியட்நாமுக்கு விமானம் இயக்க ஒப்பந்தம்: சென்னை நீக்கம்; பெங்களூரு, ஹைதராபாத் சேர்ப்பு
ADDED : மார் 14, 2025 05:36 AM

இந்தியா - வியட்நாம் இடையேயான இரு தரப்பு விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்தில், சென்னையை மீண்டும், 'பாயின்ட் ஆப் கால்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
பொதுவாக நாடுகள் இடையே விமானங்களை இயக்குவதற்கு, 'பைலேட்டரல் ஏர் சர்வீஸ் அக்ரீமென்ட்' என்ற விமான போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதில், விமானங்கள் வகை, 'பாயின்ட் ஆப் கால்' என்ற அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியல், இடைநிறுத்தங்கள், வாராந்திர விமான சேவைகளின் எண்ணிக்கை, பயணியர் இருக்கை எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் இடம்பெறும். இவை அனைத்தையும் பரிசீலனை செய்து முடித்த பின், இரு நாட்டு அரசுகள் இடையே ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்.
பாயின்ட் ஆப் கால்
கொரோனா காலத்துக்கு முன் வரை, இந்தியா - வியட்நாம் இடையேயான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் டில்லி, மும்பை, கொல்கட்டா, சென்னை ஆகிய நகரங்கள், பாயின்ட் ஆப் கால் பட்டியலில் இருந்தன. ஆனால், டில்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து வியட்நாமுக்கு விமானங்கள் இயக்கவே நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இதனால், சென்னைக்கு எந்த சேவையும் கிடைக்கவில்லை. இருப்பினும், பட்டியலில் சென்னை இருந்தது.
இந்நிலையில், 2023ல் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்தியா - வியட்நாம் இடையேயான திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தில், சென்னை, கொல்கட்டா நீக்கப்பட்டு, தனியார் நிர்வகிக்கும் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள், பாயின்ட் ஆப் கால் பட்டியலில் இணைக்கப்பட்டன.
ஏற்கனவே குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காமல் இழுத்தடிப்பது, பயணியரை கையாள்வதில் அலட்சியம், தனி வணிக மேம்பாட்டு பிரிவு இல்லாதது போன்ற காரணங்களால், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தை, வியட்நாம் நாட்டுக்கு விமானம் இயக்குவதற்கான பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: வியட்நாம் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், டில்லி, மும்பை, சென்னை, கொல்கட்டா ஆகிய விமான நிலையங்கள் இடம்பெற்றன. இதற்கென ஒதுக்கப்பட்ட வாராந்திர சேவைகளின் எண்ணிக்கை, 28 மட்டுமே.
இந்த 28 சேவைகளை, இந்த நான்கு விமான நிலையங்களும் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், வியட்நாம் விமான நிறுவனங்கள், டில்லி, மும்பை போன்ற பயணியர் வருகை அதிகம் உள்ள நகரங்களில் இருந்து இயக்கவே ஆர்வம் காட்டுகின்றன.
வளர்ச்சியை பாதிக்கும்
அதனால், பட்டியலில் சென்னை இருந்தும் எந்த பயனும் இல்லாமல் இருந்தது. தற்போது, திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில், சென்னை மற்றும் கொல்கட்டா நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சேர்த்துள்ளது.
அப்போதும், 28 வாராந்திர சேவைகளை மட்டுமே இந்த நான்கு விமான நிலையங்களும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதை அதிகரிக்க வேண்டும் என, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், இரு தனியார் விமான நிலையங்களும் தெரிவித்தன.
அதன்படி, 28 என்ற சேவைகள் தற்போது 42 ஆக மாறியுள்ளன. இதன் காரணமாக, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு கூடுதல் சேவை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் நீக்கப்பட்டுள்ளது, நகரின் வளர்ச்சியை பாதிக்கும்.
தனியார் விமான நிலையங்கள் தங்கள் தேவைக்காக அமைச்சகத்திடம் முறையிட்டு, பல்வேறு சேவைகளை பெறுகின்றன. விமான நிலைய ஆணையமும், சென்னை விமான நிலைய வளர்ச்சிக்காக, அமைச்சகத்திடம் இதுபற்றி அழுத்தம் தந்ததாக தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -