ஆட்சியில் பங்கு கேட்கலாம்.. இப்போதைக்கு சூழல் இல்லை: சுருதி குறைந்த திருமாவளவன்
ஆட்சியில் பங்கு கேட்கலாம்.. இப்போதைக்கு சூழல் இல்லை: சுருதி குறைந்த திருமாவளவன்
ஆட்சியில் பங்கு கேட்கலாம்.. இப்போதைக்கு சூழல் இல்லை: சுருதி குறைந்த திருமாவளவன்
ADDED : மார் 14, 2025 05:40 AM

மதுரை: மதுரையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
ஆட்சியில் பங்கு கேட்கலாம் தான். ஆனால், இப்போதைக்கு அதற்கான சூழ்நிலை இல்லை. சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனையும், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டுதான் எந்த முடிவையும் எடுப்போம். தொடர்ந்து அப்படித்தான் செயல்படுவோம்.
எங்களுடைய கட்சியையும் மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். அந்த காலத்தை, முன் கூட்டியே கணித்து சொல்ல முடியாது. மாநில கட்சியாக மக்கள் அங்கீகரித்து இருக்கின்றனர். இனிவரும் காலங்களில் அதிகாரமிக்க வலிமையான கட்சியாகவும் அங்கீகரிப்பர்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். வட இந்தியாவிலிருந்து வரக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது.
நாம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நமக்கு ஹிந்தி தெரியாது; புரிந்து கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்த பின்பும், ஹிந்தியிலேயே பேசுகின்றனர். ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை; அதனாலேயே இந்த சிக்கல் என்பது என்னுடைய கருத்து.
ஹிந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லி கொடுக்கட்டும். யாரும் யாரையும் தடுக்கவில்லை. ஆனால், ஹிந்தியை எங்கும் திணிக்கக்கூடாது. திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியாக கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மதுரை, சிவகங்கை பகுதியில் சிறுவர்களை கொலை செய்கின்றனர். மாணவர்களை தாக்கும் சம்பவம் நடக்கிறது. ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, புலனாய்வு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்; அதை அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.