அ.தி.மு.க., ஓட்டுகளை சுருட்டிய தி.மு.க.,
அ.தி.மு.க., ஓட்டுகளை சுருட்டிய தி.மு.க.,
அ.தி.மு.க., ஓட்டுகளை சுருட்டிய தி.மு.க.,
UPDATED : ஜூலை 15, 2024 07:06 AM
ADDED : ஜூலை 15, 2024 12:36 AM

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டுகளை தி.மு.க., மொத்தமாக சுருட்டியுள்ளதால் பழனிசாமிக்கு கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரிந்து சென்றவர்களை எல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என, பலரும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் தே.மு.தி.க., -- எஸ்.டி.பி.ஐ., தவிர வேறு எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. பா.ம.க.,வை வைத்து கொண்டு, தன் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து, பா.ஜ., தேர்தலை எதிர்கொண்டது. அதில், பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க.,வும் இடம் பெற்றன.
அ.தி.மு.க., - பா.ஜ., அணிகளோடு நாம் தமிழர் கட்சியும் களத்தில் வலுவாக நிற்க, எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து தி.மு.க., கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டது. அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்தது. தென் மாவட்டங்களில் மூன்றாம் இடத்துக்குச் சென்றது.
திருநெல்வேலி உள்ளிட்ட சில தொகுதிகளில், நான்காம் இடம் பெற்றதோடு, டிபாசிட்டையும் இழந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்களும், தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் ஒன்றிணைக்க வேண்டும் என, குரல் எழுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, காமராஜ், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் செங்கோட்டையன் தலைமையில் பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தினர். லோக்சபா தேர்தல் தோல்வி ஏன் என்பது குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் பழனிசாமி.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடாததால், விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கும் அ.தி.மு.க., ஓட்டுகளில் பெரும்பகுதி தி.மு.க., பக்கம் சென்றதாகவே கணக்கிடப்படுகிறது. மிச்சமிருப்பவை பா.ம.க.,வுக்கு சென்றுள்ளன. அப்படியென்றால், இனி அ.தி.மு.க., தலைமையை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி தொண்டர்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கட்சியை ஒருங்கிணைத்து வலுவான இயக்கமாக, அ.தி.மு.க.,வை கொண்டு செல்லவில்லை என்றால், தொண்டர்கள் வேறு பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையில், ஏற்கனவே அறிவித்தது போல, சசிகலாவும் தொண்டர்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் அறிவித்து, வரும் 17ம் தேதியில் இருந்து தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செல்லவிருக்கிறார்.
கட்சி பலவீனமாக இருப்பதை அடுத்து தான், தேர்தல் தோல்வி குறித்து நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியை வைத்துக் கொண்டே, வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்க வேண்டும் என்று, நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
அதனால், முதலில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்; இல்லையென்றால், கட்சி காணாமல் போகும். இதைத்தான், மீண்டும் பழனிசாமியை சந்திக்கவிருக்கும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர். அப்படியும், பழனிசாமி முரண்டு பிடித்தால், அவரை விட்டு விட்டு கட்சியை ஒருங்கிணைக்கலாமா என ஆலோசிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -