கோவையில் நிற்காமல் பறக்கும் 5 ரயில்கள்; திருப்பி விடப்பட்டாலும் பலன் இல்லை
கோவையில் நிற்காமல் பறக்கும் 5 ரயில்கள்; திருப்பி விடப்பட்டாலும் பலன் இல்லை
கோவையில் நிற்காமல் பறக்கும் 5 ரயில்கள்; திருப்பி விடப்பட்டாலும் பலன் இல்லை
ADDED : ஜூலை 12, 2024 03:59 AM

கொங்கன் ரயில்வே வழித்தடத்தில், தண்ணீர் உட்புகுந்ததால், வடமாநிலங்களுக்குச் செல்லும் ஆறு ரயில்கள், கோவை வழியாகத் திருப்பி விடப்பட்டாலும், ஐந்து ரயில்கள் நிற்காமல் செல்கின்றன.
கோவை மாவட்டத்தில் பல லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானத் துறை, பவுண்டரி, மில்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும், இவர்களின் பங்களிப்பு பிரதானம். இவர்களில் பலர், இங்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தும் வருகின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கோவையில் வந்து இறங்கிக் கொண்டேயிருக்கின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே, ரயில்களில்தான் தங்கள் ஊர்களிலிருந்து வருகின்றனர்; சொந்தக் காரணங்கள், தேர்தல் மற்றும் பண்டிகை போன்ற பொதுவான விஷயங்களுக்காக, ஆயிரக்கணக்கில் ரயில்களில் பயணம் செய்கின்றனர். கடுமையான நெரிசலில் நீண்ட நெடிய துாரம், பெரும் கஷ்டத்துடன் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தேவை அதிகரிப்பு
அதனால், கோவையிலிருந்து வட மாநிலங்களுக்கு எவ்வளவு ரயில்களை இயக்கினாலும் போதாது என்கிற அளவுக்கு, அவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் கோவையிலிருந்து வடமாநிலங்களுக்கு மிகக் குறைவான ரயில்களே இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னைக்கு அடுத்ததாக அதிக வருவாய் தரும் கோவையிலிருந்து மும்பைக்கு மட்டுமே, தினசரி ரயில் இயக்கப்படுகிறது; டில்லிக்கு வாராந்திர ரயில்கள் மட்டுமே, இங்கிருந்து செல்கின்றன.
ரயில் பராமரிப்புக்கான வசதி இல்லை என்ற ஒரே காரணத்தைக் காட்டி, பல புதிய ரயில்களை கேரளாவுக்குத் தள்ளிக் கொண்டு போவது, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதேபோல, சிறப்பு ரயில்களையும் பெரும்பாலும் கேரளாவிலிருந்து இயக்கவே, அதிகாரிகள் அக்கறை காட்டுகின்றனர். இந்த பாரபட்சத்துக்கு உதாரணமாக இப்போதும் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை புறக்கணிப்பு
கேரளாவிலிருந்து கொங்கன் ரயில்வே வழித்தடத்தில் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு ஆறு ரயில்கள், அந்த வழித்தடத்தில் மாதுரே-பெர்னம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள சுரங்கப்பாதையில், தண்ணீர் புகுந்து விட்டதால், அவ்வழியே செல்லும் ஆறு ரயில்கள் கோவை வழியே திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த ரயில்கள், மும்பை, டில்லி மற்றும் இந்துார் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களாகும்.
இந்த ரயில்கள் கோவை வழியே திருப்பி விடப்பட்டாலும், அவற்றில் இந்துார் செல்லும் ரயில் மட்டுமே, கோவை சந்திப்பின் வழியே செல்கிறது. மற்ற ஐந்து ரயில்களும், போத்தனுார் வழியே செல்வதுடன், அங்கும் நிற்காமல் செல்கின்றன.
தற்காலிகமாக இந்த ரயில்கள் திருப்பி விடப்பட்டாலும், இவற்றை கோவையின் வழியே இயக்கி, 'புக்கிங்'கிற்கு அனுமதித்தால் ஏராளமான பயணிகள் பயன் பெறுவர். ஆனால் நெருக்கடியைக் காரணம் காட்டி, தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதிலும் கோவையைப் புறக்கணித்துள்ளனர்.
-நமது நிருபர்-