மீண்டும் வருவாரா?: டில்லி உஷ்ஷ்ஷ்
மீண்டும் வருவாரா?: டில்லி உஷ்ஷ்ஷ்
மீண்டும் வருவாரா?: டில்லி உஷ்ஷ்ஷ்
ADDED : ஜூன் 09, 2024 12:43 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினம், 3ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது அமைச்சக அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். இவருடைய அமைச்சகத்தில், 45 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐந்து செயலர்கள் பணியாற்றுகின்றனர்.
'இன்று எனக்கு இந்த அமைச்சகத்தில் அமைச்சராக என்னுடைய கடைசி நாள். மீண்டும் அமைச்சராக வருவேனா என்பது தெரியாது. வராமல் கூட இருக்கலாம்; மேலும், வீட்டையும் காலி செய்து விடுவேன்' என, கூறி அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார் நிர்மலா.
'மூன்றாவது முறையாக நிச்சயம் மோடி பிரதமராக வருவார்; அதில், எந்த சந்தேகமும் கிடையாது. வந்தால் நிலைமை எப்படி இருக்கும் என தெரியாது' என்றாராம் அமைச்சர்.
நிதி அமைச்சகத்தின் செயலர் சோமநாதன்; இவர் தமிழர். 'எதற்கு இவ்வளவு சீக்கிரம் தேநீர் விருந்து கொடுத்து விடை பெறுகிறீர்கள்?' என, தமிழிலேயே நிதி அமைச்சரிடம் கேட்டாராம் சோமநாதன்.
'நான் அமைச்சர் பதவியில் தொடர்வேனா என்பது பிரதமர் மோடியின் விருப்பம். அவர் தான் முடிவு செய்ய வேண்டும்' என, பதில் கூறினாராம் நிர்மலா.
மற்ற மத்திய அமைச்சர்கள் யாரும் தன் அமைச்சக அதிகாரிகளுக்கு தேரீர் விருந்து கொடுத்து விடைபெறவில்லை.