உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: வேட்பாளர் தேர்வில் குளறுபடி என புகார்
உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: வேட்பாளர் தேர்வில் குளறுபடி என புகார்
உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: வேட்பாளர் தேர்வில் குளறுபடி என புகார்
ADDED : ஜூன் 08, 2024 11:39 PM

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வீழ்ச்சி அடைவதற்கு, வேட்பாளர் தேர்வில் கட்சி தலைமையின் தலையீடு உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்தன. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., 240 இடங்களை மட்டுமே வென்றது. இதனால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 2014ல், 282 இடங்களை கைப்பற்றி 31 சதவீத ஓட்டுகளையும், 2019ல் 303 இடங்களில் வென்று 37.36 சதவீத ஓட்டுகளையும் தன்னந்தனியாக அள்ளிய பா.ஜ.,வுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளன.
அதிர்ச்சி
உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பெரிதும் நம்பிய பா.ஜ.,வுக்கு, தற்போது அங்கு சொந்த கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், பா.ஜ., 33 இடங்களை மட்டுமே பெற்றது.
கடந்த 2014ல் 71 இடங்களிலும் 2019ல் 62 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், தற்போதைய முடிவு பா.ஜ., தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலத்தில் ஆட்சியில் இருந்தும், அயோத்தியில் ராமருக்கு கோவில் எழுப்பப்பட்டும் இந்த சரிவு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி வித்தியாசம், 2019ல் 4.79 லட்சமாக இருந்த நிலையில், இந்த முறை 1.52 லட்சமாக குறைந்ததும், அமேதியில் ஸ்மிருதி இரானியின் தோல்வியும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்த சில மாதங்களில் நடந்த தேர்தலில், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்ததும் பா.ஜ.,வை கவலையடைய செய்துஉள்ளது.
லோக்சபா தேர்தலின் இந்த முடிவு சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்த அக்கட்சி, இந்த சரிவுக்கான காரணங்களை அலசத் துவங்கியுள்ளது.
அதன்படி, கட்சித் தலைமையின் தலையீடு, மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் அரவணைப்பில் சுணக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக கூறப்படுகின்றன. இது குறித்து அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் பரிசீலிக்கப்பட்ட போது, முதல்வர் யோகி ஆதித்யநாத், 56 பேர் அடங்கிய பட்டியலை கட்சி தலைமையிடம் தந்து, அதில் உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கும்படி கூறினார்.
ஆனால், அதில், 36 பெயர்களை நீக்கிய பா.ஜ., மேலிடம், பிறருக்கு வாய்ப்பளித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 18 பேர் தோல்வி அடைந்தனர்.
பிற கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளித்தது, உள்ளூர் நிர்வாகிகளை கவலையடைய செய்தது. இதன் காரணமாகவும் பா.ஜ., ஓட்டு வங்கி சரிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் போது, அங்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர்கள் தங்கள் நிலங்களை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர்களை திருப்திப்படுத்தும் விவகாரத்தில் மாநில பா.ஜ., தவறியதும் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தால், அரசியல் சட்டத்தை பா.ஜ., மாற்றி விடும் என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். இது பட்டியல் இனத்தவர் மற்றும் ஓ.பி.சி.,யினர் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியது.
இதனால், ஓ.பி.சி., பட்டியல் இனத்தவர், பழங்குடியினரின் ஓட்டுகள் பா.ஜ., வுக்கு எதிராக விழுந்தன.
மக்கள் கவலை
கட்சி நிர்வாகிகளின் அவசியமற்ற பேச்சும், இந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக அமைந்தன. இலவச ரேஷன் போன்ற பல நலத்திட்டங்கள் இருந்தபோதிலும், வேலையின்மை போன்ற காரணங்கள் கிராமப்புற மக்களை கவலையடைய செய்தது.
இவற்றையெல்லாம்விட, குஜராதில் இருந்து பல தொழிலதிபர்கள் உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியில் பயனடைந்த விதம், உள்ளூர் மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அதிகளவு பிரசாரம் செய்ததில், உள்ளூர் மக்களின் கோபம் தேர்தலில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.
இது போன்ற காரணங்களை அலசி, அவற்றை சரி செய்து, 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டு வங்கியையும், சதவீதத்தையும் உயர்த்தும் முயற்சியை பா.ஜ., இப்போதே துவங்க வேண்டும் என்பதே அந்த கட்சி விசுவாசிகளின் விருப்பம்
- நமது சிறப்பு நிருபர் -.