கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து: பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் அபாயம்
கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து: பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் அபாயம்
கொடைக்கானலில் விதிமீறல்களால் பேராபத்து: பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு; இயற்கை பேரிடர் அபாயம்
ADDED : ஜூலை 05, 2024 04:38 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பது சகஜமாக நடக்க கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்ட கொடிகளால் ஆன கானகம் தான் கொடைக்கானல். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வரும் இங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இதற்கு மாறாக விதிமீறிய கட்டுமானங்கள், நீர்நிலைகள், வருவாய் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, தடை செய்யப்பட்ட இயந்திரங்களின் பயன்பாடு, கனிம வளங்கள், பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு போன்ற, இயற்கைக்கு சேதம் விளைவிக்கும் செயல்களை, ஆளும்கட்சி ஆதரவுடன் அதிகாரிகள் தாராளமாக அரங்கேற்றுகின்றனர்.
சில ஆண்டுகளாக நடக்கும் இப்பிரச்னைகளுக்கு செவி சாய்க்க மறுக்கும் அதிகாரிகளால், கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கொடைக்கானல் பேராபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இங்கு நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளன.
உயர்நீதிமன்றம் உத்தரவு
வட்டக்கானல் குடியிருப்பு பகுதியில் விபத்து, ஆபத்தை விளைவிக்கும் வகையில் டெட்டனேட்டர் கொண்டு பாறைகளை தகர்க்கும் நடவடிக்கை குறித்து அப்பகுதி இயற்கை ஆர்வலர் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உத்தரவின்படி அதுதொடர்பான குவாரியை தடை செய்து ஆர்.டி.ஒ., அறிக்கை அளிக்க உத்தவிட்டார்.
எனினும், வில்பட்டி ஊராட்சியில் வெடி மருந்துகளை பயன்படுத்தி, வெகுசாதாரணமாக பாறைகள் தகர்த்து பிளாட்டிற்கு பாதை அமைக்கப்படுகிறது. மேலும் பல விதிமீறல்கள் தைரியமாக செய்யப்படுகின்றன என, இந்த ஊராட்சியில் வசிப்போர் குற்றம்சாட்டுகின்றனர். மற்ற பகுதிகளிலும் இதே நிலை தான் உள்ளது.
ஊராட்சிகள் மட்டுமல்லாது, கொடைக்கானல் நகராட்சி பகுதிகளிலும் பல்வேறு விதிமீறல்கள் தொடர்கின்றன. இவ்விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டால், ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும்.
அதிகாரிகள் தரப்பில் தங்களுக்கு ஏராளமான பணிச்சுமைகள் இருப்பதாக ஒருவரை ஒருவர் கைகாட்டி பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும், நில மாபியா கும்பல்கள் தங்களது தவறுகளை கச்சிதமாக செய்து வளம் காண்கின்றனர்.
அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
சாமானியர்கள் கட்டுமானங்களில் கண்டிப்பு காட்டும் அதிகாரிகளின் சட்டம், அதிகாரம் படைத்தோருக்கு வளைந்து கொடுக்கிறது. நேர்மையான அதிகாரிகளை நியமித்து, கொடைக்கானலில் தொடரும் விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பழநி கிரிவீதி ஆக்கிரமிப்புகள் விவகாரத்தில் நீதிமன்றம் காட்டிய கண்டிப்பு கொடைக்கானலிலும் தொடர வேண்டும் என்பது, இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாகும்.